மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன- ஜேவிபியின் தலைவர்…

மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன- ஜேவிபியின் தலைவர்…மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதிகள் தப்பமுயன்றவேளையே வன்முறை வெடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன அதேவேளை வேறு விதமான தகவல்களும் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள அவர் இந்த விடயம் குறித்து துல்லியமான விசாரணைகள் அவசியம் என தெரிவித்துள்ளார்.சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கைதிகள் மத்தியில் கடந்த சில நாட்களாக குழப்பநிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.
மஹரசிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 80 வீதமானவர்கள் தடுப்புகாவல் உத்தரவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தண்டனை வழங்கப்படாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ளவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிவித்து கொலைகளை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் 180 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் – நெரிசலான சிறைகளில் பதற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைக்கைதிகள் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறும்,தாங்கள் கொரோனாவினால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான ஆகக்குறைந்த வசதிகளையாவது வழங்குமாறும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிறைக்கைதிகளின் கரிசனைகளுக்கு உரிய தீர்வை வழங்கப்படாமையாலேயே வன்முறைகள் மூண்டிருக்கலாம் என்ற கருத்து காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதிகளை கொல்வது நியாயப்படுத்த முடியாத ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கை இது கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளது என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கொலைகள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதிகளுக்கு உணவு கொண்டுவருபவர்களிற்கு தடைவிதித்ததை தொடர்ந்து மஹர சிறையில் பல பிரச்சினைகள் உருவாகின என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் சிறைச்சாலையே உணவுகளை வழங்கவேண்டிய நிலையேற்பட்டது இதனால் உணவின் தரம் குறைந்து காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற இடத்திலிருப்பதால் ஏற்படக்கூடிய பதட்டத்துடன் உணவு குடிநீர் பற்றாக்குறைகள் சுகாதார பிரச்சினைகள் மரணத்தை எதிர்கொள்வது போன்ற பிரச்சினைகளும் காணப்பட்டன இதனை உணர்ந்துகொள்வதற்கு அரசாங்கம் தவறியது துரதிஸ்டவசமான விடயம் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.