எமது உரிமைகளில் கைவைத்தால் அஹிம்சை வழி நீதியான போராட்டம் தொடரும்-கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்

சிங்கள மக்களோடு இணைந்து வாழவே இன்னும் விரும்புகிறோம் எனவும், அஹிம்சை வழி நியாயமான நீதியான போராட்டம் தொடரும் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை ஊடக மையத்தில் நேற்று மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் முழுமையாக பங்கேற்மை மகிழ்ச்சியாகவுள்ளது. இது நாம் பிறந்த நாடு . எமக்கும் இந்த நாடு சொந்தம். எமது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வந்திறங்கியதும் நாம் அனைவரும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி போராட்டத்திற்கு பிள்ளையார் சுழிபோட்டோம் .

பின்பு பொலிசார் படையினர் தடை என்று பல வந்தன. அத்தனையையும் சுமந்திரன் சாணக்கியன் தலைமையில் எதிர்கொண்டு முன்னேறினோம். அதுவே எமக்கு உற்சாகத்தையும் அளித்தது. நம் நகர மக்களின் உணர்வு ரீதியான பங்களிப்பு கூடுதலாகவிருந்தது.

சர்வமத் தலைவர்கள் வழி நடாத்தினர். பொலிகண்டி வரை சென்று திரும்பினோம். இது முடிவல்ல ஆரம்பம். தொடர்ச்சியாக எமது உரிமைகளில் கைவைத்தால் அஹிம்சை வழி நியாயமான நீதியான போராட்டம் தொடரும். இதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.

 

 

நாம் தொகை அளவில் சிறிதளவே தவிர சிறுபான்மை அல்ல. ஏனையவர்களைப் போல சம உரிமை எமக்குமுண்டு. அதில் இடர்பாடு வந்த போது ஏலவே பலகோணங்களில் போராட்டங்கள் இடம் பெற்றன . இன்னமும் வருகின்ற போது எமது போராட்டம் தொடரும்.

எமது பேரணியின் கோரிக்கைகளில் இரண்டுக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளது . தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், ஜனாசா அடக்கம் இவையிரண்டுக்கும் வெற்றி கிடைத்துள்ளன. எமது பேரணி வெற்றிபெற வைத்த இறைவனுக்கு முதல் நன்றிகள்.

பங்கேற்றவர்கள் எமதருமை மக்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் தமிழ் பேசும் மக்களுக்கான நீதியை வேண்டி அரசாங்கத்திற்கு எதிராகவே எமது பேரணி இடம்பெற்றது. தவிர அது சிங்கள மக்களுக்கெதிரானதல்ல நாம் இன்னமும் சிங்கள மக்களோடு இணைந்து வாழவே விரும்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.