தேர்தலின் போது ஒரு பேச்சும் தேர்தலின் பின்னர் மற்றுமொரு பேச்சும் பேசுவது தமிழ் கூட்டமைப்பினருக்கு வழமையாகி விட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிங்களை  தனியான இனம் என  இன்னும்  ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லிங்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின்  தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் பேசும் மக்கள் என அண்மைக்காலமாக உரையாற்றி வருகின்றார்.எனினும் முஸ்லீம்கள்  தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் அம்மக்களை தனியான இனம் என சுமந்திரன் போன்றவர்கள் இன்னும்  ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வாறு ஏற்றுக்கொண்டிருந்தால் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள்.ஏனெனில் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் 15 முதல் 17 வீதம் வரை குறைக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையை தெரிந்திருந்தும் கூட இவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பினை வலியுறுத்தி வருகின்றார்கள் என்றால் அவர்களது வார்த்தையில் தமிழ் பேசும் மக்கள் என்பதற்கு உண்மையான அர்த்தமில்லை என்பதை கூற முடியும்.

இவ்வாறு தமிழ் பேசும் மக்கள் என கூறி முஸ்லீம் மக்களிற்கு ஒரு மாயாஜாலத்தை காட்டி முஸ்லீம்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்ற முயல்கின்றனர் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.அத்துடன் தமிழ் பிரதேச செயலக விடயத்தை நிறுத்தி ஒரு குடையின் கீழ்  செயற்பட தைரியம் உங்களுக்கு உள்ளதா என்பதை கேட்க விரும்புகின்றேன்.ஆனால் தமிழ் முஸ்லீம் மக்களை பிரிப்பதற்கு திட்டமிட்டு விட்டு ஊடகங்களில் ஒற்றுமை பற்றி பேசி வருகின்றீர்கள். தேர்தல் வருகின்ற போது ஒரு பேச்சும் அது முடிந்த பின்னரும் மற்றுமொரு பேச்சும் பேசுவது கூட்டமைப்பினருக்கு வழமையாகி விட்டது. அத்துடன் தேர்தல் காலங்களில் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களாக மாறியும் விடுகின்றீர்கள்.எனவே உண்மையான உள சுத்தியுடன் இருந்தால்  மூன்று விடயங்களில் உறுதியாக இருக்க வேண்டும்.அதாவது முஸ்லீம்கள் விரும்பாத வட கிழக்கு இணைப்பினை இணைக்க முயற்சிக்க மாட்டோம் எனவும் கல்முனை உப பிரதேச செயலகத்தை ரத்து செய்து ஒரு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்க முன்வர வேண்டும்.தோப்பூர் பிரச்சினைக்கு தீர்வு காண உங்களால் முடியுமா என கேட்க விரும்புகின்றேன்.

மட்டக்களப்பில் உள்ள முஸ்லீம்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டு வாருங்கள்  நாங்களும் தமிழ் பேசும் மக்களாக இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம் என  தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.