நைஜீரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமனம் பெற்றார்! நற்சான்றுப் பத்திரமும் நைஜீரிய ஜனாதிபதியிடம் கையளிப்பு

நைஜீரிய சமஷ்டி குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள வேலுப்பிள்ளை கணநாதன் தனது நற்சான்று கடிதத்தை தலைநகர் அபுஜாவில் உள்ள இராஜாங்க இல்லத்தில் நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரியிடம் அண்மையில் கையளித்தார்.

இந்த உத்தியோகபூர்வ வைபவத்தையடுத்து இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின்போது நைஜீரிய ஜனாதிபதியும் உயர்ஸ்தானிகரும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது கூட்டத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி புஹாரி, தனது நட்பு ரீதியான வாழ்த்துக்களை இலங்கை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

மேற்படி சந்திப்பின்போது உயர்ஸ்தானிகர், இலங்கையின் சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பிலும் சுருக்கமாக ஜனாதிபதி புஹாரியிடம் விவரித்தார்.

அதற்கு பதிலளித்த புஹாரி, கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றானது பல நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது நாடு இலங்கையிலான அபிவிருத்திகளை மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டு, பெரும் நம்பிக்கையை தரும் வகையில் அடையப்பட்ட முன்னேற்றம் குறித்து திருப்தியை வெளிப்படுத்தினார்.

உயர்ஸ்தானிகர் கணநாதன் இலங்கைக்கும் நைஜீரியாவுக்கும் இடையிலான 10 வருடகால இராஜதந்திர உறவுகள் குறித்து குறிப்பிடுகையில் –

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆபிரிக்காவுடன் குறிப்பாக, ஆபிரிக்காவில் முன்னிலையில் உள்ள பொருளாதார நாடுகளில் ஒன்றான நைஜீரியாவுடன் பிராந்தியங்களுக்கிடையிலும் இரு நாடுகளுக்கிடையிலும் கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க உறவுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகள், உலக தென் பிராந்திய நாடுகள், ஜி7 மற்றும் அணிசேரா நாடுகள் என்பவற்றின் அங்கத்தவர்கள் என்ற வகையில் இலங்கையும் ‍நைஜீரியாவும் உலக விவகாரங்கள் தொடர்பில் பொதுவான கண்ணோட்டங்களை பகிர்வதாக கோடிட்டுக் காட்டிய உயர்ஸ்தானிகர் கணநாதன், நைஜீரிய சமஷ்டிக் குடியரசால் சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு குறித்து பாராட்டை தெரிவித்ததுடன், இரு தரப்பு உறவுகளையும் வலுப்படுத்த அதுபோன்ற பெறுமதி மிக்க ஆதரவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி புஹாரி, இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார கூட்டுறவை விருத்தி செய்வது பாரிய முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது எனத் தெரிவித்து, முதலீட்டுக்கு குறிப்பாக, புதுப்பிக்கக்கூடிய வளங்கள், எண்ணெய், எரிவாயு, விவசாயம் சார்ந்த தொழிற்றுறைகள், தொலைத்தொடர்பாடல்கள், திண்ம கனிப்பொருள்கள் முதலியவற்றுக்கு வெகுமதியளிக்கும் வகையிலான வாய்ப்புகள் உள்ளன என சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.