கொரோனாவாகிய நான்

தலைகனம் பிடித்த
மானுட இனத்தின்
தலைகனம் அறுக்க
வந்தவன் நான் . . . .

விஞ்ஞானத்திற்கும்
மெஞ்ஞானத்திற்கும்
சவுக்கடி கொடுக்க
வந்தவன் நான் . . .

வல்லரசிற்கும்
பேரரசிற்கும்
இயற்கை இதுவென
பாடம் புகட்ட
வந்தவன் நான் . . .

சாதிகளாய், மதங்களாய்,
மொழிகளாய், இனங்களாய்
சண்டையிட்டு சாகும்
மூடர்களின் கூட்டத்தை
வேறருக்க வந்தவன் நான்

வளர்ச்சி என்ற பெயரில்
இயற்கையை கொன்றவர்களின்
இறுதி நாட்களை தீர்மானிக்க
இறங்கி வந்தவன் நான் . . . .

கற்பழிப்பு, கொலை, கொள்ளை
கட்சி செய்திகள்
சினிமா செய்திகள் என
வேரூன்றிய ஊடகத்தில்
இன்று முழுவதுமாய்
நிறைந்தவன் நான்

சாதி மதம் பிரித்து
மொழி இனம் பிரித்து
கடவுளை பிரித்து வைத்த
ஒட்டு மொத்த மானுடத்தின்
உயிரை பிரித்தெடுக்க
வந்தவன் நான்

கூலிக்கு மாரடிக்கும்
கூத்தாடி கூட்டத்தை
தலைவனாய், கடவுளாய்
கொண்டாடும் மானுடத்தின்
ஆட்டத்தை நிறுத்த வந்தவன் நான்

ஆயுதம் அடுக்கி கொண்டு
வல்லரசு நான் என்றவனை
கண்ணிற்கு தெரியா
கிருமியாய் நின்று
வென்றவன் நான்

எப்பொழுதெல்லாம்
மானுடத்தின் தலைகனம்
தலை தூக்குகிறதோ
அப்பொழுதெல்லாம்
பாடம் புகட்ட
படைக்க பட்டவன் நான்

என் பெயர் என்னவென்று
எனக்கே தெரியா சூழலில்
நீங்களே பெயர் சூட்டி
குலைநடுங்கி போவதும்

எங்கிருந்து வந்தேன் என்று
எங்கெங்கோ ஓடி ஓடி
என் முகவரி தேடி அலைவதும்

நான் இயற்கையா?
செயற்கையா என
புரியாமல் புலம்புவதும்

வேடிக்கையாய் தான் இருக்கிறது
பார்ப்பதற்கு

கோடி கோடியாய்
சேர்த்த பொழுதும்
நிலவிற்கே சென்று
பாதம் பதித்த பொழுதும்

மானுடம் வெறும்
மானுடம் மட்டுமே என்பதை
உணர்த்த வந்தவன் நான்

இப்பொழுது
எந்த நாயகனும் வரமாட்டான்
உங்களை காப்பாற்ற
எந்த போர் ஆயுதத்தாலும் ஆகாது
என்னை கொல்ல
எந்த தலைவனும் துணியமாட்டான்
இனி உங்களை தொட்டு பேச
எந்த பேர் புகழும் செல்வமும்
நிலைக்காது இனி உலகில் மெல்ல
இந்த உண்மையை மீண்டும் சொல்லவே
இங்கு வந்தவன் நான்

எவ்வளவு தான் சேர்த்தாலும்
எதுவும் உனக்கு நிலை இல்லை என்று
இருக்கும் வரையில்
பாடம் புகட்டி கொண்டே இருப்பேன்
நான் இறந்திடினும்
மீண்டும் வேறு பெயரில் வந்து
மானுட கர்வத்தை வேரருப்பேன்

கடைசியாய் ஒரு வேண்டுகோள் மட்டுமே
தேவாலயம் சென்றோ
மசூதி சென்றோ
ஆலயம் சென்றோ
கூட்டு பிராத்தனை என்ற பெயரில்
விரைவாய் என்னையும் பரப்பி
கடவுளின் பெயருக்கும்
கலங்கம் விளைவித்து விடாதீர்கள்
கடவுளையாவது நிம்மதியாய்
விட்டு வைய்யுங்கள் . . . .

இப்படிக்கு
நீங்கள் பெயர் சூட்டிய
கொரோனாவாகிய நான் . . .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்