நாளை நடைபெறும் தேர்தலில் நாங்கள் யாருக்கு வாக்களிப்பது ?  தகுதியான முஸ்லிம் வேட்பாளர்கள் யார் ?

நாளை நடைபெறவுள்ள தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்பட இருக்கின்ற பாராளுமன்றமானது முஸ்லிம்களுக்கு மிகவும் சவால்கள் நிறைந்ததாக காணப்படும். அதிகளவான தென்னிலங்கை இனவாத சக்திகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்குரிய சாத்தியங்கள் காணப்படுவதே இதற்கான காரணமாகும்.

நேரடியாக முஸ்லிம்கள் மீது அநீதிகள் இழைத்தால் அது சர்வதேசரீதியில் அரசாங்கத்துக்கு இருக்கின்ற நன்மதிப்பை பாதிக்கும் என்ற காரணத்தினால், முஸ்லிம்களுக்கு பாதகமான சட்டங்களை இயற்றி அதன் மூலமாக சட்டரீதியாக முஸ்லிம்களின் உரிமையை பறிக்கின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

இவ்வாறான நிலைமை ஏற்படுகின்றபோது இனவாத சக்திகளுக்கு ஈடுகொடுத்து முஸ்லிம் மக்களுக்கு தற்போது இருக்கின்ற சில சலுகைகளையாவது பாதுகாக்கும் திராணியுள்ள வேட்பாளர்களை தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் மட்டுமே எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கான எமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

அதாவது அரசியல் தெரியாதவர்களையும், முஸ்லிம்களின் பூர்வீக வரலாறுகள் புரியாதவர்களையும், சமூகத்தைவிட பதவிக்காக அலைபவர்களையும், கொந்தராத்து காரர்களையும், ஊடகங்கள் மூலமாக வீரம் பேசுகின்ற கோழைகளையும், மற்றும் அரசியல் தரகர்களையும் நாங்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் நஷ்டமடைய போவது எமது எதிர்காலம் என்பதனை மறந்துவிடக்கூடாது.

பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் தங்களது கடமைக்காக அங்கு உரையாற்றுவதனால் மட்டும் எதனையும் சாதித்துவிட முடியாது. அந்த உரைகள் ஹன்சாட்டில் மட்டும் பதிவாகியிருக்குமே தவிர வேறொன்றுமில்லை.

இனவாத உறுப்பினர்களை எதிர்த்து துணிச்சலுடன் பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் விவாதம் புரிய தகுதியானவர்கள் யார் ?

ஆழமான அரசியல் அறிவுள்ளவர்கள் யார் ? இனவாதிகளின் கேள்விகளுக்கு தர்க்கரீதியாக உடனுக்குடன் ஆதாரங்களுடன் பதில் வழங்கக்கூடியவர்கள் யார் ?

இனவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமலும், அரசின் சலுகைகளுக்கும், பணத்துக்கும் சோரம்போகாமலும் மக்களின் காவலர்களாக உழைக்கக்கூடியவர்கள் யார் ? போன்ற கேள்விகளை மனதில் சுமந்தவர்களாக நாங்கள் வாக்களிக்க வேண்டும்.

மாறாக, தேர்தல் மேடைகளில் மட்டும் வீர வசனம் பேசுகின்ற கோழைகளுக்கும், இரட்டை நாக்குடையவர்களுக்கும், கூஜா தூக்கிகளுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும் வாக்களித்தால் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் எமக்கிருக்கின்ற சலுகைகளை இழந்து மியன்மார் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலை எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படலாம் என்பதனை மனதில் நிறுத்தியவர்களாக வேட்பாளர்களை நாங்கள் தெரிவுசெய்தல் வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்