முடியாட்சியை உருவாக்கவே ராஜபக்ச அரச தரப்பு திட்டம்…

’20’ நிறைவேறினால் புதிய அரசமைப்பு என்ற பேச்சே
இல்லாமல் போகும் என்று சுமந்திரன் எம்.பி. எச்சரிக்கை

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு, அரசமைப்பு திருத்தம் என்ற பெயருடன் முடியாட்சியை உருவாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால் புதிய அரசமைப்பு உருவாக்கம் என்ற பேச்சே இருக்காது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

‘அரசமைப்பின் 20ஆவது திருத்தமும் அரசியல் விளைவுகளும்’ என்ற தலைப்பிலான ஆய்வரங்கு நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மூலம் ஏன் இவ்வளவு அவசரமாகக் கொண்டு வரப்படுகின்றது என்று பலருக்குக் கேள்வி எழலாம். எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் சுயாதீன தேர்தல்கள்  ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைகின்றது. அது முடிவடைந்தால் இப்போது இருக்கின்ற அரசமைப்பு சபையின் அனுமதியுடனேயே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். தாம் நினைத்தவாறு ஜனாதிபதி நியமிக்க முடியாது. அதற்கிடையில் திருத்தச் சட்ட வரைவு கொண்டுவரப்பட்டால் இனி நியமிக்கப்படும் தேர்தல்கள் ஆணைக்குழுவினர் ஜனாதிபதியின் கைப்பொம்மையாகவே இருப்பார்கள். ஏனெனில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவரையும் ஜனாதிபதியே நியமிப்பார்.

இது நாட்டில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தும். இந்த நாட்டில் கடந்த காலங்களில் நீதியானதும் சுயாதீனமுமான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமை மாறி 20 ஆவது திருத்த சட்ட வரைவு நிறைவேறினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும்.

அரசமைப்பு திருத்தம் என்ற பெயருடன் முடியாட்சியை உருவாக்கும் திட்டத்தின் ஆரம்பம் தற்போது நடைபெறுகின்றது.

இன்று அரச திணைக்களங்களுக்குச் சென்று தாம் வாயால் சொல்வதுதான் சுற்றுநிருபம் என்று ஜனாதிபதி கூறி வருகின்றார். 20ஆவது திருத்தச் சட்ட வரைவு வர முதலே ஜனாதிபதி இவ்வாறு செயற்படுகின்றார் என்றால் 20ஆவது திருத்தம் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தற்போது 20 ஆவது திருத்த சட்ட வரைவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு நடைபெறுகின்றது. அது எமது எதிர்ப்பின் முதல் படி. இரண்டாவதாக நாடாளுமனறத்தில் அதனை நாம் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும்.

குறிப்பாக நாளை முதல் தென்னிலங்கையில் பாரிய போராட்டங்கள் 20ஆவது திருத்த சட்ட வரைவுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விடயத்தில் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு முக்கிய கடமைகள் உள்ளன. அதாவது தேர்தல் காலத்தில் மக்கள் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்பது போல இந்தச் சட்ட வரைவின் பாதக விளைவுகளை விளக்க வேண்டும்.

முழுமையாக அரசியல் பிரதிநிதிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களும் இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். தற்போது அரசின் பங்காளிகளாக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு மக்கள் அழுத்தங்களைகி கொடுக்க வேண்டும். அவர்களையும் இந்தச் சட்ட வரைவுக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டாம் என வலியுறுத்த வேண்டும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள அரச சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களை 20ஆவது திருத்த சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என மக்கள் வற்புறுத்த வேண்டும்.

இந்த நாட்டில் இருக்கின்ற பிரதான பிரச்சினை, நாட்டை இரண்டாகக்கூறு போடக் கூடிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் ஒரு புதிய அரசமைப்பு உருவாக்கப்பட முடியாது.

20ஆவது திருத்த சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால் புதிய அரசமைப்பு உருவாக்கம் என்ற பேச்சே இருக்காது.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும், தமிழர்களுக்கான முழுமையான தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் அபிலாஷைகள், சுய மரியாதைகள், வாழ்வதற்கான ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இரு நாட்டுப் பிரதமர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கைப்  பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து ஓர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

இந்தியாவுடன் இணைந்து வெளியிடுகின்ற கூட்டறிக்கையில் இவற்றைக் கூறிவிட்டு சில மணித்தியாலங்களில் தாங்கள் தனியாக சிங்களத்தில் சில விடயங்களைத் தவிர்த்து தனி அறிக்கை வெளியிட்டு மாயாஜாலம் காட்டும் வித்தைகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.