கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 10 நிமிடங்கள் மணி ஓலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிராத்தனை செய்வதற்கு ஆலய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து மதத் தலைவர்களும் இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும் என நல்லை ஆதின குரு முதல்வர் ஸ் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா எனும் ஆபத்தான நோயின் அவலம் மூன்றாவது அலையாக அதிகரிக்கும் வேளையில் பொதுமக்கள் மிகக் கவனமாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

அனைத்து மக்களையும் காத்தருள சிவப் பரம்பொருளை முதற்கண் மன்றாடி, வேண்டுதல் செய்வோம். அனைவரும் பிராத்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

01.ஆலயங்களில் பக்தர்கள் கூடுவதைத் தவிர்த்து வீட்டில் அமைதியாகப் பிராத்தியுங்கள்.

02.ஆலயங்களில் நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகள் நடைபெறவேண்டும். அதற்கு இடையூறின்றி ஒத்துழையுங்கள்.

03.சிறுவர்கள், முதியோர், நோயாளர்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை இயன்றவரை தவிருங்கள்.

04.சுகாதாரப் பகுதியினரின் அறிவுறுத்தல்களுக்கு அனைவரும் மதிப்புக் கொடுங்கள்.

05.நோயாளர்களுக்கு உதவும் மருத்துவத் துறையினரின் பாதுகாப்புக்கு அனைவரும் உதவுங்கள். அவர்களுக்காகவும் கடவுளை வேண்டுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்