மட்டக்களப்பு புகையிரத நிலைய ஒழுங்கையினை செப்பனிடுவதற்கான பணிகள் உடனடியாக ஆரம்பம் ; மாநகர முதல்வர்…

விஸ்தரிக்கப்பட்ட மட்டக்களப்பு புகையிரத நிலைய குறுக்கு வீதியினை செப்பனிடுவதற்கான பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 39வது சபை அமர்வானது இன்று (12) வியாழக்கிழமை காலை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

இவ் அமர்வின் விஷேட அம்சங்களாக நாட்டில் நிலவும் கொரொனா தொற்றிலிருந்து மட்டக்களப்பு மாநகரினை பாதுகாக்கும் நோக்கிலான சுகாதார ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வெளி மாவட்டங்களில்  இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருவோரை கண்காணித்து உரிய முறையில் அவர்களை தனிப்படுத்துவதோடு,  பொதுமக்கள் கூடும் இடங்களில் இறுக்கமான சுகாதார ஏற்பாடுகளை அமுல்படுத்துவது  தொடர்பிலும் சபையில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் விஸ்தரிக்கப்பட்ட புகையிரத நிலைய குறுக்கு வீதியினை  செப்பனிடுவதற்காக துரைசிங்கம் மதன் மற்றும் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் இவ்வாண்டுக்கான தமது வட்டார நிதி பங்கீட்டில் இருந்து மொத்தமாக 4 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் உடனடியாக  அப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் முதல்வர் தமது அறிவிப்புகளின் ஊடாக சபையில் தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு மஞ்சந்தோடுவாய் யுனானி ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் பெண் ஊழியர்கள் அன்மையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு ஊடாக சந்திப்பொன்றினையும் மேற்கொண்டிருந்ததாகவும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகைகளும் எடுக்கப்படவில்லை என்றும்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் தயாளக்குமார் கௌரி சபையில் சுட்டிக் காடியிருந்தார்.

மாநகர சபையில் இடம்பெறும் கொள்வனவு விடயங்கள் தொடர்பில் பல குறைபாடுகள் நிலவுவதாகவும், தொழிநுட்ப குழுவானது ஒரு சில பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதன் தரத்தினையும், நாமத்தினையும் மாத்திரம் கருத்தில் கொண்டு அதனை சிபார்சு செய்வதால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகுவதாகவும் சுயேட்சைக் குழு உறுப்பினர்களான கிளனி வசந்தகுமார் மற்றும் நவரெட்ணராஜா திலீப்குமார் ஆகியோரும் தமது கருத்துகளை இதன்போது தெரிவித்திருந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.