துரிதமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பொதுநூலகப் பணிகள். மேற்தள வேலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டன

மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பொதுநூலகத்தின் மேற்தளப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர் வே.தவராஜா, சீ.ஜெயேந்திரகுமார் ஆகியோர் இன்று (08) காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டட பணிகளை உரிய அனுமதிகளையும், அதற்குரிய நிதிகளையும் கடந்த நல்லாட்சிக் காலத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஞா.ஸ்ரீநேசனின் உதவியுடன் பெற்று கட்டிடங்கள் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டதாவும், அதனை  அடுத்து தற்போது நிர்மானப் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் இதன்போது மாநகர முதல்வர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவித்தார்.

அத்துடன் கட்டட நிர்மானத்துக்காக 345 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மூலமாக 169.87 மில்லியனும் அப்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம ஊடாக மாகாண சபையிலிருந்து 100 மில்லியனும் மிகுதிப் பணத்தினை மாநகர சபையும் ஒதுக்குவதென்ற தீர்மானத்தில் 2019ஆம் ஆண்டு தேசிய கட்டடங்கள் திணைக்களத்துக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பொறுப்பேற்ற பின்னர் மிக வேகமாக செயல்பாட்டு உரிய நிதிகளைப் பெற்று இவ்வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும். தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர் இந்த வேலையை சரியான முறையில் செய்து வருவதோடு,  இதனை தேசிய கட்டடங்கள் திணைக்களம்  முழுமையாகக் கண்காணித்து வருவதால் அந்தக் கட்டிட வேலைகளை 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் முடிவுறுத்தித் தருவார்கள் என்ற நம்பிக்கையும் தமக்கு உள்ளதாக பிரதி முதல்வர் க.சத்தியசீலன் கருத்து தெரிவித்தார்.

அத்துடன் நிறைவுறுத்த தேவையான மிகுதி பணமானது மாநகர சபையின் நிதியிலேயே செலவிடப்படவுள்ளதால் அதனை தற்போதைய  ஆளுங்கட்சியில் உள்ள இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பொறுப்பேற்று  இதற்குரிய நிதி ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என்றும் பிரதி முதல்வர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.