மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 207 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை(8) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த 11 பேரில் 6 நபர்கள் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சிலாபத்துறை சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த மீன் வாடி ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் குடும்ப உறவினர்களாகவும் மேலும் ஒருவர் அரிப்பு பிரதேசத்தில் மீன் வாடி ஒன்றை வைத்துள்ளவராகவும் மேலும் ஒருவர் ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு உயிரிழந்த ஒருவரின் குடும்ப அங்கத்தவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏனைய 3 நபர்களும் முசலி பிரதேச சபையில் கடமையாற்றுகின்ற அலுவலக உத்தியோகத்தர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் பெப்ரவரி மாதம் வரை 190 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 150 கொரோனா தொற்றாளர்கள் சமூகத்திலும், 40 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் நகர பகுதியில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுகின்றது.

எனினும் முசலி பிரதேசத்தில் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுபவர்களின் குடும்ப உறவுகள் அதிகமானோர் தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர்.

இது சமூகத்தில் வைரசின் அளவு அதிகரித்து செல்வதற்கு ஒரு அறிகுறியாக உள்ளது. பரிசோதனைகளின் போது கணிப்பிடப்படுகின்ற சி.ரி பெறுமானமும் குறைவடைந்து வருவதினால் இது உறுதி செய்யப்படுகின்றது.

எனவே பொது மக்கள் இந்த நிலமையை கருத்தில் கொண்டு மிகவும் அவதானத்தோடும், விழிர்ப்புணர்வுடனும் சுகாதார நடை முறைகளை பின் பற்றி நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகின்ற பட்சத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 8962 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 334 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார சேவையில் கடமையாற்றுகின்ற 91 சத வீதத்திற்கும் அதிகமான உத்தியோகத்தர்களுக்கு மன்னார் மாவட்டத்தில் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி 4 வாரங்களின் பின்னர் மீண்டும் செலுத்தப்பட உள்ளது.

மேலும் இன்றைய தினம் திங்கட்கிழமை(8) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முன்னனி நிலைகளில் கடமையாற்றுகின்ற 70 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.