வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4245 ஏக்கர் காடுகள் விடுவிப்பு: மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் திலீபன்
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4245 ஏக்கர் அரச காடுகள் விடுவிக்கப்படுவதற்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டிற்கான வவுனியா பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம்நேற்று
(02) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் கு.திலீபனின் தலைமையில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. நீண்ட கால பிரச்சனையபாக இருந்து வந்த வனஇலாகா பிரச்சனை தீர்வு காணப்பட்டது. கடந்தகால அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஏனைய அரச காடுகள் 4245 ஏக்கர் விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக வனஇலாகா எல்லைக் கற்களை பதித்து இருந்தாலும் அக் காணிகளுக்குள் நாங்கள் விவசாயம் செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என வன இலாகா திணைக்களத்திடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதற்கு அகுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களால் கோரிக்கை விடப்பட்டுள்ள வவுனியா பிரதேச செயலகத்தின் அனைத்து பகுதிகளிலும் யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வவுனியா மாவட்டத்தில் இருக்க கூடிய வைத்தியசாலையின் விபத்து பிரிவுக்கு மேற்கூரை கட்டுவதற்காக 261 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 100 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வடிகால் மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இனி வரும் காலங்களில் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் உடனுக்குடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அது தொடர்பான அறிக்கைளை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளேன் எனத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை