இலங்கை போக்குவரத்து சேவையினருக்கான அறிவித்தல்

இலங்கை போக்குவரத்து சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 5 வருடங்களுக்கு அதிகமான அனுபவமுள்ள அனைத்து ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, நீண்டகாலமாக நிலவிவரும் சாரதி ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்வரும் மே மாதத்தில் உரிய பரீட்சையை நடாத்தி இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

நாடு பூராகவும் காணப்படும் உப டிப்போக்களை பஸ் தரிப்பிடங்களாக மட்டும் பயன்படுத்துவதற்கும், அவை தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை பிரதான டிப்போக்கள் ஊடாக மேற்கொள்வதற்கும் அதன் மூலம் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்தை முறைமைப்படுத்தவும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதற்கும் அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நகர்ப்புற வாகனங்களை கையாள்வது தொடர்பான முடிவுகளை எடுக்கும் உள்ளூராட்சி போக்குவரத்துக் குழுக் கூட்டங்களில் போக்குவரத்து அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி ஒருவரின் பங்குபற்றலின் முக்கியத்துவத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இதனால் நகர்ப்புற வாகனங்களை கையாள்வது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் போது போக்குவரத்து அமைச்சை பிரதானமாக கொண்டு அந்த தீர்மானங்களை எடுப்பதன் ஊடாக முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்பது உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வெற்றிடங்களுக்கு குறைந்த வருமான குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்தவர்களை விரைவாக இணைத்துக்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். நவீன வாகனங்களில் காணப்படும் உயர் தொழிநுட்பம் வாய்ந்த உபகரணங்கள் தொடர்பில் அரச அலுவலகங்களில் பணியாற்றும் சாரதிகளுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தனர். இவ்வாறு உபகரணங்கள் தொடர்பில் சாரதிகளிடம் காணப்படும் போதிய அறிவின்மையால் நவீன வாகனங்களின் நிலைமை மிக விரைவாக சேதமடைவதாக உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.

ஒன்லைன் முறையில் புகையிரத பயணச்சீட்டுக்களை ஒதுக்கும் போது உள்ள சிரமங்கள் குறித்து உறுப்பினர்கள் இங்கு கருத்துத் தெரிவித்ததுடன், இது தொடர்பில் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்க தேவையான பரிந்துரைகளை வழங்க பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதிகளுக்கு விசேட சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அமைச்சு ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக்கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, ரிஷாட் பதியுதீன், அஷோக் அபேசிங்க, எஸ். கஜேந்திரன், குணசிங்கம் திலீபன், அலி சப்ரி ரஹீம், சமனப்பிரிய ஹேரத், உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, சாந்த பண்டார, சுதத் மஞ்சுள, மதுர விதானகே, எச். நந்தசேன, பைஸல் காசீம், அகில எல்லாவல, கோகிலா குணவர்தன, வைத்தியர் உபுல் கலப்பத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.