தந்தை செல்வா காட்டிய அர்ப்பணத்தின் பயனாக ஐநா மனித உரிமைப் பேரவையில் இனப்பிரச்சினக்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன-மாவை சேனாதிராஜா

எமது தந்தை செல்வா காட்டிய அர்ப்பணத்தின் பயனாக இன்று ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் இனப்பிரச்சினக்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 123வது பிறந்ததின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா அவர்களின் தலைமையில் வாவிக்கரை வீதியில் தந்தை செல்வா சிலை அமைந்துள்ள பூங்காவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் நிருவாகிகள், தந்தை செல்வாவின் பேரனாகிய எஸ்.சி.சி.இளங்கோவன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, சிறப்புரையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இன்று தந்தை செல்வாவின் பிறந்த தினத்தை நாங்கள் ஆராதித்து வாழ்த்தி வணங்கி எமது இனத்தின், தேசத்தின் விடுதலைக்காக அவர் விட்டுச் சென்ற உறுதிமொழிகளை எல்லோருடைய இதயத்திலும் இருத்தி செயற்படுகின்றோம்.

எத்தனையோ சத்தியாக்கிரகப் போராட்டங்களைச் சந்தித்த வரலாற்று நாயகன் அவர். 1956ம் ஆண்டு காலிமுகத்திடலிலே எமது இனத்தின் விடுதலைக்காகவும், மொழியின் சமத்துவத்திற்காகவும் இரத்தம் சிந்திய வரலாறு இன்று வரையிலும் எமது நினவுகளில் இருக்கின்றது. அகிம்சை வழியிலும், ஆயுத ரீதியிலும், எமது இலட்சக் கணக்கான மக்களைப் பறிகொடுத்தும் இன்னும் அந்த விடிவை நாங்கள் எட்டவில்லை. எமது மக்களின் விடிவை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றோம், போராடிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த இலக்கை அடைவதற்காக இன்று தேசத்தின் விடுதலைக்காகவும், எமது இனத்தின் விடுதலைக்காவும் சர்வதேச அரங்கிலே தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எமது நிகழ்ச்சிகளின் முன்னோடியாக, எமது தந்தை செல்வா காட்டிய அர்ப்பணத்தின் பயனாக இன்று ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் இனப்பிரச்சினக்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அது தமிழ் மக்களுக்கு ஒரு மனப் பலத்தை அளித்திருக்கின்றது.

இவையெல்லாம் தந்தை செல்வா அவர்களின் வழிகாட்டலிலே இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது என்பதை ஏற்றுக் கொண்டு அந்த இலக்கை நாங்கள் அடைவோம். தமிழ் மக்களின் விடுதலைக்காக எங்களை அர்hப்பணித்து உழைப்போம் என்று எமது தந்தை செல்வாவின் பிறந்த தினத்திலே தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.