மஜீத்புரம் பள்ளிவாசல் நிர்வாகிகள் தன்னிச்சையாக நடக்கும் அவலம் : வக்பு சபை, கலாச்சார திணைக்களம் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர மக்கள் கோரிக்கை !

அம்பாறை வட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத்புரம் ஜும்மாப்பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்ந்தும் நிர்வாக முறைகேடுகளை மேற்கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். திருமண அனுமதிக்கடிதம் வழங்குவது முதல் பல்வேறு முறைகளிலும் இவர்களின் அதிகாரத் துஷ்ப்பிரயோகமும், நிர்வாக முறைகேடுகளும் இடம்பெற்று வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணமாகாத 30 வயதுடைய ஒருவர் 24 வயதுடைய திருமணமாகாத ஒரு பெண்மணியை திருமணம் செய்ய பள்ளிவாசலுக்கு அனுமதி கடிதம் கோரியபோது பெருந்தொகையை பள்ளிவாசல் செயலாளர் கோரியதாகவும் அதன் பின்னர் பல நாட்களாக இழுத்தடிப்பு செய்ததாகவும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். மேலும் கருத்து தெரிவித்த அவர்கள் ஆவணங்களை கூட அடையாளம் கண்டு வாசிக்கத் தெரியாதவர்களை நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தியுள்ளனர். நடக்க முடியாத முதுமையடைந்த ஓய்வுபெற்ற ஒருவரை நிர்வாகிகளின் தலைவராக நியமித்துள்ளார். அவரால் நிர்வாகத்தை சரிவர நடத்த முடியாத நிலை உள்ளது என்றனர்.

இது தொடர்பில் மஜீத்புரம் ஜும்மாப்பள்ளிவாசல் நிர்வாக தலைவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட போது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. செயலாளரை தொடர்புகொண்டு பேசியபோது தனது சொந்த தொழிலை முடித்துக்கொண்டு வரும்வரை காத்திருக்க கூறியதாகவும் அவர்கள் காத்திருக்க முடியாமல் தன்னுடன் சண்டைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் பெருந்தொகையை பணம் கேட்டது தொடர்பில் வினவியபோது என்னுடன் சண்டைக்கு வந்தவர்களுக்கு பாடம்புகட்டும் விதமாக 50 ஆயிரம் தண்டப்பணம் செலுத்துமாறு நிர்வாகிகள் முன்னிலையில் கோரியதாகவும் பின்னர் அந்த தொகையை 10 ஆயிரமாக குறைத்ததாகவும் கூறினார்.

இது தொடர்பில் முஸ்லிம் கலாச்சார திணைக்களம் மற்றும் வக்பு சபையினர் தலையிட்டு உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.