7 பேர் கவலைக்கிடம்! இலங்கையில் ‘கொரோனா’ தாண்டவம்!!

👉 இன்று நால்வர் அடையாளம்
👉 இதுவரை 117 பேர் பாதிப்பு
👉 13 மாவட்டங்கள் இலக்கு
👉 கொழும்பே முதலிடம்
👉 11 பேர் குணமடைந்தனர்
👉 ஒருவர் மட்டுமே மரணம்
👉 105 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை
👉 117 பேருக்குத் தொற்றுச் சந்தேகம்

உலக நாடுகளைப் புரட்டி எடுத்துவரும் பாரிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இலங்கையிலும் தனது தாண்டவத்தைத் தினந்தோறும் காட்டத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் இன்று புதிதாக நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை 117 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்றிரவு அறிவித்துள்ளது. அவர்களில் இருவர் வெளிநாட்டவர்களாவர்.

கொரோனா தொற்றாளர்களில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை வரை 11 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏனைய 105 பேரும் மூன்று வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதற்கமைய கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் 95 பேரும், வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் 09 பேரும், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது எனவும், அவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், இரத்தினபுரி, குருணாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இருந்தே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் இதுவரை 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 17 பேரும், புத்தளம் மாவட்டத்தில்12 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 21 வைத்தியசாலைகளில் 5 வெளிநாட்டவர்கள் உட்பட 117 பேர் கொரோனாத் தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

அடுத்து வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று பரவும் வேகம் இலங்கைக்குள் அதிகரிக்கலாம் எனும் சந்தேகம் நிலவும் நிலையில், ஊரடங்குச் சட்டக் காலப்பகுதியில் அனைவரையும் தத்தமது வீடுகளுக்குள்ளேயே தனிமைப்பட்டிருக்குமாறு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

…………………………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.