இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது 

 

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த 38 பேரில் 26 பேர் ஆண்கள், 05 பேர் பெண்கள், 07 பேர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 06 பேர் ஆட்கடத்தலுக்கு காரணமானவர்கள் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இவர்கள் பயணித்த படகையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, வாழைச்சேனை, சிலாபம், கல்பிட்டி, உடப்பு, கொழும்பு, மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

“ஆஸ்திரேலிய அரசாங்கம் சட்டவிரோத குடியேறிகளை ஆதரிப்பதில்லை, அவ்வாறு வருபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுகின்றனர். அந்த வகையில், கடந்த மே 24ம் தேதி 12 இலங்கையர்களையும் ஜூன் 09ம் தேதி 15 இலங்கையர்களையும் ஆஸ்திரேலியா நாடுகடத்தியுள்ளது. அவ்வாறு திருப்பி அனுப்பப்படும் சட்டவிரோத குடியேறிகள் எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய விசா பெற தகுதியற்றவர்களாக ஆகக்கூடும்,” என இலங்கை கடற்படை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த போர் மற்றும் இனரீதியான அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான தஞ்சக்கோரிக்கை பயணங்கள் ஆஸ்திரேலிய அரசின் உந்துதலால் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் அவ்வாறான பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.