இனப் பிரச்சினைக்கான தீர்வே பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த வழி – சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான சிறந்த வழியென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பின் ஊடாகத் தீர்வு காணப்படவேண்டுமாயின், அரசியல் யாப்பு உருவாக்கத்தில் சர்வதேச அரசியல் சாசன வல்லுனர்களின் பங்களிப்பும் இடம்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அதிபர்கள் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் அதனூடாக தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன், அரசியல் தலைவர்கள் உண்மையில் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விருப்பமுடையவர்களாக இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டை பொருளாதார நிலையிலிருந்து முன்னோக்கி நகர்த்த வேண்டுமானால் தென்னிலங்கை அரசியல் சமூகம் இதய சுத்தியுடன் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வரவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கத்தைச் சந்திக்கும் சர்வதேச அமைப்புகள், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முக்கியத்துவப்படுத்தும் நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில், சர்வதேச சமூகத்திற்கு ஒரு பதில் அளிக்க வேண்டிய கடப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாக அவர் கூறினார்.
சமஷ்டி அரசியலமைப்பு
பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு சமஷ்டி அரசியலமைப்பு முறை வேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு கையளித்துள்ளது. இதனால் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒருவருட கால அவகாசம் தேவையில்லை என்றும் குறிக்கப்பட்ட ஒருசில வாரத்திற்குள்ளேயே பேச்சுவார்த்தைகளை முடிக்க முடியும் என சுரேஸ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக மீண்டும் ஒருமுறை புதிய அரசியல் சாசனம் என்ற நாடகத்தை அரசாங்கம் அரங்கேற்றுகின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை