சம்பந்தனின் அழைப்பை நிராகரித்த தமிழ்த்தேசிய கட்சிகள்!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று மாலை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் அந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் இதில் பங்கேற்கவில்லை என்பதோடு, இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் அதில் பங்கேற்றிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
“நேற்று மாலை கட்சியின் தலைவர் சம்பந்தனின் அழைப்பிலே, அனைத்து தமிழ்த்தேசிய கட்சி தலைவர்களுடன், அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரு பொது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக அழைப்பு விடுத்திருந்தோம்.
சமஷ்டி அடிப்படையில் தீர்வு
ஆனால் தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும், நானும், தலைவர் சம்பந்தனும் மட்டும் தான் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தோம். ஏனைய கட்சிகளில், சிலர் கால அவகாசம் போதாது என்று அறிவித்து இருந்தார்கள்.
ஆகையால், எல்லோருக்கும் பொருத்தமான திகதியை தெரியப்படுத்தி அடுத்த அடுத்த வாரமே மீண்டும் கூடலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழரசுக் கட்சி காலம் காலமாக எடுத்திருக்கும் நிலைப்பாடு சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வு அவசியம் என்பது.
மீண்டும் கூட்டம்
சமஷ்டி கட்டமைப்பினாலான ஒரு தீர்வு வடக்கு கிழக்கிற்கு வழங்க வேண்டும் என்ற பொது நிலைப்பாட்டுடன் இணங்குகின்றவர்கள் எங்களுடன் சேர்ந்து தங்களது குரல் பதிவையையும் சேர்த்து கொடுப்பது இந்த தருணத்தில் சிறந்தது.
அடுத்த, கூட்டம் பற்றி தழிழ் அரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றைய கட்சிகளுடன் ஆலோசித்து அனைவருக்கும் பொருத்தமான திகதியிலேயே பொருத்தமான இடத்திலே சந்திப்பை ஒழுங்குப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை