அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் விண்ணப்பங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் – தமிழ் ஏதிலிகள் கழகம்

ஏதிலிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட தமிழ் ஏதிலிகளின் விண்ணப்பங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் மீள பரிசீலனை செய்யவேண்டும் என தமிழ் ஏதிலிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ஓஎஸ் விசாவில் இன்னும் பல ஆயிரக்கணக்கான ஏதிலிகள் உள்ளடக்கப்படவில்லை என தமிழர் ஏதிலிகள் கழகம் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது.

புதிய விசா, டிபிவி வைத்திருப்பவர்களிற்கும் செவ் வைத்திருப்பவர்களுக்கு மாத்திரம் நிரந்தர குடியுரிமையைப் பெறுவதற்கான வழியை கொண்டுள்ளது என தமிழர் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

ஆனால் சுமார் 12 ஆயிரம் ஏதிலிகளுக்கு இந்த விசா மறுக்கப்பட்டுள்ளது. விசாவிற்கான துரித பரிசீலனை முறையின் கீழ் இது மறுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழர் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தொழில்கட்சி தொடர்ந்தும் எல்லைகளைப் பாதுகாப்பது அத்துடன் கடந்த ஒருமாதகாலமாகப் படகுகள் மூலம் வரும் ஏதிலிகளுக்கு விசா வழங்க மறுப்பது என்ற தன்னிச்சையான முடிவுகளானவை ஏதிலிகள் மட்டத்தில் தகுதிவாய்ந்தவர்கள் தகுதியற்றவர்கள் என்ற பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது எனத் தமிழர் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஏதிலிகளுக்கு மாத்திரம் ஆர்ஓஎஸ் வழங்குவதால் இந்த விசாவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்காலம் தொடர்பான பயத்தில் இருக்கும் மற்றும் திருப்பி அனுப்பப்படுவோமோ என்ற ஏக்கத்தில் இருக்கும் ஏனையவர்களுக்கு அதிகரித்த விழிப்புணர்வையும் பயத்தையும் கொடுக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஏதிலி சிறுவர்களாக உள்ளவர்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அவர்கள் தங்கள் நண்பர்கள் போல பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏதிலிகள் எப்படி நாட்டுக்கு வந்தார்கள்? எவ்வளவு காலம் நாட்டில் வசிக்கின்றார்கள்? அவர்கள் வேலை செய்கின்றார்களா? வரிகட்டுகின்றார்களா? என்ற பேதமின்றி அனைவருக்கும் நிரந்தர பாதுகாப்பு விசா வழங்கப்படவேண்டும். பல புதிய தமிழ் ஏதிலிகள் இந்த விசா நடைமுறையின் கீழ் விலக்கப்பட்டுள்ளனர் எனவும் தமிழ் ஏதிலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இனவன்முறைகள் காரணமாக 1984 ஆம் ஆண்டு முதல் தமது பாதுகாப்பைத் தேடி தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள போதிலும் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்காது இந்த அரசாங்கம் அவர்களைத் தொடர்ந்தும் பயமுறுத்தி வைத்திருக்கின்றது எனவும் தமிழர் ஏதிலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்களில் பலர் இனப்படுகொலைகளுக்கான சாட்சிகளாக இருந்தபோதிலும் அவர்களின் விண்ணப்பங்கள் ஆஸ்திரேலியாவின் ஏதிலிக்கான மதிப்பீட்டு பரிசோதனையின் போது நிராகரிக்கப்பட்டுள்ளன எனவும் தமிழர் ஏதிலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக 2015 ஜூலை முதலாம் திகதிக்கும் 2022 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் குடிவரவுதுறையின் பரிசீலனை அதிகார சபையின் கீழ் 94 வீத தமிழ் ஏதிலிகளின் விண்ணப்பம் நிராகரிக்ப்பட்டமை எமக்கு ஆழ்ந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. ஏனைய உலக நாடுகளின் ஏதிலிகளை விட இலங்கைத் தமிழர்களே அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர் எனவும் தமிழ் ஏதிலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அடிப்படையில் ஏதிலிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழ் ஏதிலிகளின் விண்ணப்பங்களை மீள பரிசீலனை செய்யவேண்டும் என ஏதிலிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்