கொரோனா வைரஸ் பாதிப்பு இலங்கையில் 106 ஆக உயர்வு

👉 நேற்று நால்வர் அடையாளம்
👉 இதுவரை 6 பேர் பூரண சுகம்
👉 100 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை
👉 மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
👉 237 பேருக்குத் தொற்றுச் சந்தேகம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 102 இலிருந்து 106 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு  அறிவித்துள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரண குணமடைந்துள்ளனர்.
குணமடைந்த மூவரும் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து நேற்று மாலை வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் சீனப் பெண்ணும் உள்ளடங்குகின்றார்.
ஏனைய 100 நோயாளர்களும் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 89 பேர் அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலும், 10 பேர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும், ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் 89 பேரில் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரினதும் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 237 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்