தைராய்டு பிரச்சனை இருந்தா குழந்தை பிறக்குமா?

நமது உடலில் கழுத்து பகுதியில் இருக்கும் எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகள் தான் தைராய்டு பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது.. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகமாக இந்த பிரச்சனை வருகிறது. கழுத்தில் பட்டாம்பூச்சி போல் இருக்கும் தைராய்டு சுரப்பியின்சுரப்பில் மாற்றம் உண்டாகும் போது ஏற்படும் பிரச்சனை தான் தைராய்டு என்றழைக்கப்படுகிறது. தைராய்டில் இரண்டு வகை உண்டு இந்த சுரப்பு குறைவாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு , அதிகமாக சுரப்பதை ஹைப்பர் தைராய்டு என்றும் அழைக்கிறார்கள்.

தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் உடலின் இயக்கத்தில் மிகவும் முக்கியபங்கு வகிக்கிறது. .உடலுக்கு போதிய அயோடின் சத்து இருந்தால் தைராய்டு சுரப்பும் சீராக இருக்கும். அயோடின் பற்றாகுறை ஏற்படும் போது தைராய்டு பிரச்சனை சந்திக்கிறார்கள்.

ஆண்களை விட பெண்கள் அதிகம் இப்பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். உலக அளவில் பெண்கள்10 சதவீதத்தினர் தைராய்டு பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். அயோடின் சத்து குறைபாடும் , பரம்பரை காரணமாகவும் இந்த பிரச்சனை வருகிறது. ஆரம்பநிலையில் இதை கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தவும் முடியும். அப்படியே தைராய்டு பிரச்சனைக்கு மாத்திரைகள் எடுத்துகொண்டாலும் அவை பக்கவிளைவுகளை உண்டாக்காது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் வாழ்நாளில் பூப்படைதல் முதல் மெனோபாஸ் வரை பல ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கிறார்கள். இந்த தருணத்தில் தைராய்டு சுரப்பிலும் மாற்றங்களை சந்திக்கிறார்கள்.
உடலில் தைராய்டு சுரப்பு குறைவாக இருப்பதை பல அறிகுறிகளை வைத்து கண்டுகொள்ளலாம். ஒரு பெண் தங்கள் உடலில் சோர்வை உணர்ந்தால் அதிலும் தொடர்ந்து உணர்ந்தால் அவர்கள் உடலில் தைராய்டு சுரப்பு குறைகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்றாக சொல்லலாம். இதனால் சுறுசுறுப்புத்தன்மையும் குறையும்.

இந்த பாதிப்பு இருக்கும் போது அவர்களால் வெயிலையும் தாங்கமுடியாது. குளிரையும் தாங்க முடியாது. வெப்பநிலைக்கு ஏற்ப உடல் மாறுவது சிரமம் உண்டாகும். உடல் எடை திடீரென்று அதிகரிக்கும். சிலருக்கு கால்களில் வீக்கம் உண்டாகும். இன்னும் சில பெண்களுக்கு குரலில் பெண் தன்மை இருக்காது. முடி உதிர்வையும் உணரலாம்.சில பெண்களுக்கு புருவ முடி கூட உதிரும். சருமம் வறண்டு இருக்கும்.உணவு சீராக எடுத்தாலும் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாகும்.

மாதவிடாய் பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய் , கருமுட்டையில் நீர் கட்டிகள், கழுத்தில் வீக்கம் இருந்தால் தான் தைராய்டு என்று நினைத்துகொள்வார்கள். ஆனால் தைராய்டு எல்லோருக்கும் எல்லா அறிகுறிகளையும் உணர்த்தாது. எந்தவிதமான அறிகுறியும் இல்லாமலும் உடலில் நீடித்திருக்கும். மாதவிடாய் பிரச்சனையை நிச்சயம் உணர்த்தும் என்பதால் இது குறித்து கவனமாக இருப்பது நல்லது. பருவமடைவது முதல், கர்ப்பக்காலம், பிரசவக்காலம், குழந்தைபேறுக்கு பிறகு, 40 வயதை கடந்த பிறகு என்று எப்போது வேண்டுமானாலும் இந்த பிரச்சனை வரலாம்.

தைராய்டு சுரப்பியில் இரண்டு விதமான பிரச்சனைகளை சந்தித்தாலும் தைராய்டு குறைவாக சுரப்பதுதான் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. வெகு சிலருக்கு மூளையில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் உண்டாகும் குறைபாட்டாலும் இவை உண்டாகிறது. ஹைப்போதைராய்டு பிரச்சனை என்று சொல்லகூடிய இந்த பாதிப்பை சிறுவயது பெண் பிள்ளைகளுக்கு இருந்தால் பூப்ப்ப்படைவது கூட தள்ளி போகிறது.

மாதவிடாய் காலம், கர்ப்பக்காலாம், பிரசவக்காலம், பிரசவத்துக்கு பிறகு என்று ஒவ்வொரு காலங்களிலும் தைராய்டு சுரப்பு பெண்களுக்கு அவசியமாகிறது. பெண்கள் பூப்படைந்த காலம் முதல் கருமுட்டையின் வளர்ச்சி சீராக இருக்க ஹார்மோன் சுரப்பு அவசியம். அப்படி ஹார்மோன் செயல்பட வேண்டுமென்றால் தைராய்டு சுரப்பும் சீராக இருக்க வேண்டும்.

தைராய்டு சுரப்பு குறைவாக இருக்கும் போது மாதவிடாய் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. தைராய்டு பிரச்சனை கருமுட்டை வளர்ச்சியில் குறைபடை உண்டாக்கும். தைராய்டு நேரங்களில் கருத்தரிக்கும் போது தைராய்டு சுரப்பு குறைவு அதிகரிக்கும் போது கருச்சிதைவு நேரிடலாம் அதே போன்று கர்ப்பக்காலம் முழுவதும் கூட இவை தொடரும் போது குறைபிரசவம் உண்டாகலாம். பாதிப்பு அதிகப்படியாக இருந்தால் குழந்தை இறக்கவும் வாய்ப்புண்டு. அதனால் தான் திருமணத்துக்கு பின்பு கருத்தருக்க விரும்பும் பெண்கள் மருத்துவரை அணுகி உடனடியாக ஆலோசனை பெற வேண்டும். தைராய்டு பிரச்சனை இருந்தால் உரிய சிகிச்சையின் மூலம் இதை சரி செய்ய முடியும்.

மருத்துவர்கள் இரத்த பரிசோதனையும் அதனுடன் TSH பரிசோதனையும் செய்து தைராய்டு எந்த அளவில் இருக்கிறது என்பதை கண்டறிவார்கள். பிறகு இந்த பிரச்சனை உங்கள் கருத்தருப்பில் சிக்கலை உண்டாக்ககூடியதாக இருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பார்கள். தைராய்டு சீராக சுரக்க மாத்திரைகள் பரிந்துரைப்பார்கள். தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையுடன் மாத்திரைகள் உட்கொண்ட உடன் இரண்டு மாதங்களில் மீண்டும் பரிசோதனை செய்து தைராய்டு சுரப்பு சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து படிப்படியாக மாத்திரைகள் அளவையும் தேவைப்பட்டால் நிறுத்திவிடுவார்கள்.

மீண்டும் நீங்கள் கருத்தரித்த பிறகும் இந்த பரிசோதனை செய்யப்படும். சில பெண்கள் கருத்தரித்த காலங்களில் தைராய்டு குறைவு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் கர்ப்பக்கால பரிசோதனையில் தைராய்டு பரிசோதனையும் அவசியமாக்கப்பட்டுள்ளது. தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண் மாத்திரைகள் எடுக்காத பட்சத்தில் அவை கருச்சிதைவையோ கருவின் மூளை வளர்ச்சியையோ பாதித்துவிடும். தைராய்டு பயப்பட வேண்டியதில்லை. தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு குழந்தை பிறக்காது என்பதும் உண்மையல்ல. ஆனால் தைராய்டு பரிசோதனை செய்து தைராக்ஸின் சுரப்பு குறைவாக இருந்தால் முறையான சிகிச்சையின் மூலம் நீங்கள் தைராய்டு சுரப்பை சீராக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு பாதுகாப்பாக குழந்தையையும் பெற்றெடுக்கலாம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.