முக்கிய வர்த்தமானிகள் இரண்டினை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனு தாக்கல்!

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் உயர் நீதிமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜுன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்த வர்த்தமானி மற்றும் நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி மார்ச் 2 ஆம் திகதி விடுத்த வர்த்தமானி ஆகியவற்றை செல்லுபடியற்றதாக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைய, தற்போதைய அரசாங்கம் நிதியை செலவிடுவதற்கு உள்ள அதிகாரம் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அரச நிதி செலவிடப்படுகின்றமை அரசியலமைப்பிற்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ள, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, அவ்வாறு செயற்பட்டதன் மூலம் அரசாங்கம் தனதும் நாட்டு மக்களினதும் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த அடிப்படை உரிமை மனுவில், ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.