வடக்கு – கிழக்கு தமிழ் கூறும் நல்லுலகிற்கு சின்னத்தம்பி ஐயாவின் மறைவு பேரிழப்பு!

தந்தை செல்வா காலத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர் அமரத்துவமடைந்த வேலுப்பிள்ளை சின்னத்தம்பி ஐயா. அவரது மறைவு வடக்குக் கிழக்கு தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட உறுப்பினர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் அம்பாறையில் அவரது இல்லத்தில் நடைபெற்றன. அவரது இறுதி நிகழ்வில் கலந்து அஞ்சலி உரையாற்றும் போதேஇவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தமிழ் மக்களின் விடிவுக்காக அவர்கள் இந்த நாட்டில் இரண்டாம்தரப் பிரஜைகளின்றி ஏனைய மக்கள் போன்று சம அந்தஸ்துடன் வாழவேண்டும் என்பதற்காக எமது பெருந் தலைவர் தந்தை செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். தந்தையின் பாசறையில் தந்தையோடு கூடவே வாழ்ந்து அம்பாறையில் தமிழரசுக் காரனாக வாழ்ந்தவர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி.

எமது இனத்தின் விடிவுக்காக தமிழ் மக்கள் இந்த மண்ணில் நிம்மதிப் பெருமூச்சு விடவேண்டும் என்பதற்காக அவர்கள் சமவுரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக அஹிம்சை ரீதியில் தந்தை செல்வநாயகம் அவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தபோது அவரோடு கூடவே போராட்டத்தில் பங்குகொண்டு எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள்.

தோன்றிற் புகழொடு தோன்றி, தமிழ் உணர்வோடு தனக்கென வாழாது தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி. அவருடைய பூதவுடன் இன்று தீயுடன் சங்கமமாகினாலும் புகழுடல் என்றும் நீண்டு இந்த அம்பாறை மணணில் அவரது புகழ் பரப்பியவண்ணமே இருக்கும். அவரது ஆத்மா மீண்டும் பிறப்பற்று நித்திய பேரின்பப் பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டி நல்லதோர் தமிழரசுத் தொண்டனை வழியனுப்புகின்றேன் என்றார்.

அமரரின் இறுதி நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எஸ்.கலையரசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.ஜெயசிறில், தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் கதிர்காமதம்பி பிரகாஸ் ஆகியோர் அஞ்சலியுரை ஆற்றினர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இரங்கல் உரையை கோடிஸ்வரன் வழங்கினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.