நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பெருந்தோட்டத் துறையின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

இலக்குடன் செயற்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு விரிவானதொரு பங்களிப்பை வழங்கும் இயலுமை பெருந்தோட்டத் துறையிடம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், கிராமிய மரமுந்திரிகை பயிர்ச்செய்கையை முன்னேற்றி கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

உலகின் அனைத்து நாடுகளும் பெரும் கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ளன. இறக்குமதியை மட்டுப்படுத்தி சவால்களை முகாமைத்துவம் செய்வதற்கு தனது அரசாங்கத்திற்கு முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெருந்தோட்டத்துறையினால் உற்பத்தி செய்யமுடியுமான பல விடயங்கள் அநாவசியமாக இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

சுதேச பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெருந்தோட்டத் துறைக்கு முக்கியமானதொரு பொறுப்பு உள்ளது. அதனை விளங்கிக்கொண்டு நட்டத்தில் இயங்கும் தோட்டங்களை இலாபமீட்டும் நிலைக்கு விரைவாக முன்னேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் விரிவாக கலந்துரையாடலுக்கு உட்படுத்தினார்.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பயிர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். பெறுமதி சேர்த்தலின் அடிப்படையில் கறுவா, மிளகு உள்ளிட்ட முக்கிய பெருந்தோட்டப் பயிர்கள் மூலம் அதிக ஏற்றுமதி வருமானத்தை சம்பாதிப்பதற்கு திட்டமிடுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

2018ஆம் ஆண்டு நாட்டின் பெருந்தோட்ட பயிர் ஏற்றுமதி வருமானம் 538 பில்லியன் ரூபாயாகும். 2022 ஆகும் போது அதனை 753 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பது தனது அமைச்சின் எதிர்பார்ப்பாகும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில், ஏற்றுமதி விவசாய அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

சுதேச சந்தையையும் ஏற்றுமதியையும் இலக்காகக் கொண்டு தென்னைப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், பளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய வடமாகாணத்தில் உள்ள பிரதேசங்களிலும் தென்னை பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளதாக தெரிவித்தார்.

கொக்கோ மற்றும் கோபி பயிர்ச்செய்கையை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் விவசாய பிரிவொன்றை தாபித்து பயிர்ச்செய்கைக்கு அதன் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து பெருந்தோட்டப் பயிர்களையும் உயர் நியமங்களுடன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை நட்டமடைவதற்கான காரணத்தை ஆராய்ந்து விரைவில் இலாபமீட்டும் நிலைக்கு கொண்டுவரும் வகையில் பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள மர ஏற்றுமதியை முறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கிராமிய மரமுந்திரிகை பயிர்ச்செய்கையை முன்னேற்றி கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும். பெருந்தோட்டத் துறையின் முன்னேற்றத்திற்காக குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும். பெருந்தோட்டத் துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வனப் பாதுகாப்பு மற்றும் காணி அமைச்சையும் பங்குதாரராக்கிக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.