நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் – பொலிஸார்

நாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் விசேட கடமை நேரத்தின் அடிப்படையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் விசேட ரோந்து நடவடிக்கைகளும் இருக்கும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் 2 நாட்களில் வீதிகளில் நடமாடும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சோதனை சாவடிகளில் மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு ரம்ழான் தினம் குறித்து கருத்து தெரிவித்த அவர், வீடுகளுக்குள் பண்டிகையை கொண்டாடுமாறும் கேட்டுக்கொண்டார். இதனை மீறி ஒன்று கூடுவார்கள் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியதாகக் கருதப்படுவார்கள் என்றும் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

எனவே கடந்த மாதங்களில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றியதைப்போலவே எதிர்வரும் இரண்டு நாட்களிலும் நடந்துகொள்ளுமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.