புத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும்: வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார
வவுனியா நிருபர்
புத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும். அடுத்து வரும் தேர்தலில் புத்தளத்தில் இருக்கும் வன்னிக்குரிய வாக்குகளை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார்.
வவுனியா, மில்வீதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னாரின் முசலி, சிலாவத்துறை ஆகிய பகுதிகளில் இருந்த முஸ்லிம் மக்கள் பலர் இடம்பெயர்ந்து புத்தளத்தில் குடியிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கான வாக்கு முசலிப் பிரதேசத்திலேயே உள்ளது. அவர்கள் புத்தளத்தில் வீடுகள் கட்டி, வேலை செய்து அங்கேயே நிரந்தரமாக இருந்து விட்டார்கள். அவர்கள் அங்கிருந்து எப்படி இங்கு வாக்களிக்க முடியும். அங்கு எல்லா வேட்பாளர்களும் சென்று பிரச்சாரம் செய்ய முடியாத நிலையும் உள்ளது. வன்னியில் போதிய இடம் உள்ளது. அவர்களை இங்கு மீள்குடியேற்றிட்டு இங்கேயே வாக்குரிமையைக் கொடுக்கலாம். அங்கு நிரந்தமாக இருப்பவர்கள் எவ்வாறு வன்னியின் பிரதிநிதியை தீர்மானிக்க முடியும்.
யுத்தம் நடைபெற்ற போது தமிழ், சிங்கள மக்களும் பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். அவர்கள் கொழும்பு போன்ற பகுதிகளிலும் வசிக்கிறார்கள். அவர்களுக்கான வாக்குரிமையையும் இடம்பெயர்தோர் வாக்குரிமையாக வன்னிக்கு வழங்க முடியுமா எனக் கேட்கின்றேன். ஆகவே புத்தளத்தில் இருப்பவர்களுக்கும், கொழும்பில் இருப்பவர்களுக்கும் ஏன் வேறுபட்ட சட்டம். ஆகவே இதனை மாற்ற வேண்டும்.
புத்தளத்தில் இருக்கும் மக்களுடைய வாக்குகள் தொடர்பாக இந்த தேர்தலில் எந்த நடவடிக்கையும் எம்மால் எடுக்க முடியாது. அடுத்து வரும் தேர்தலில் புத்தளத்தில் இருக்கும் வன்னிக்குரிய வாக்குகளை நிறுத்துவதற்கும், அவ்வாறு வாக்கு அளிப்பதாக இருந்தால் அவர்களை வன்னியில் அழைத்து வந்து மீள்குடியேற்றி வாக்களிப்பதற்கும் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு சிபார்சு செய்யவுள்ளோம்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லும் போது தமிழ் மக்களுடைய பெரியதொரு ஆதரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும் கிடைக்காத வரவேற்பு எமக்கு இங்கு கிடைத்துள்ளது. அதுபோல் இளைஞர், யுவதிகள் அவர்களின் அமைப்புக்களில் உள்ளவர்கள் எம்முடன் கரம்கோர்த்துள்ளார்கள். இதனால் இலங்கை வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத ஒரு வெற்றி பொதுஜன பெரமுனவிற்கு இம்முறை கிடைக்கும். இதனால் நாம் இம்முறை வன்னியில் மூன்று ஆசனங்களைப் பெறுவோம்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்ட காலப்பகுதியில் வல்லரசு நாடுகளாக இருக்கக் கூடிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டார்கள். இலட்சக் கணக்கில் கொல்லப்பட்டார்கள். வீதிகளில் மக்கள் இறந்து இருந்தார்கள். கடந்த நவம்பர் மாதம் நாங்கள் சிறந்த தலைவரை தெரிவு செய்தமையால் எமது நாட்டில் அவ்வாறான அனர்த்தம் பெரியளவில் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. சில தமிழ் கிராமங்களுக்கு செல்லும் போது நாம் கடந்த முறை தேர்தலில ஜனாதிபதி கோட்டபாயவுக்கு வாக்களிக்காது தவற விட்டுள்ளோம் என கவலையடைந்துள்ளார்கள். இம்முறை அவரது கட்சியைப் பலப்படுத்த இணைந்துள்ளார்கள். இதனால் பொதுஜன பெரமுன இம்முறை அபார வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை