மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்புகள்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று காலை முதல் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.காலை 07மணி தொடக்கம் ஒன்பது மணி வரையில் 11வீத வாக்குப்பதிவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் பங்குகொண்டதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 428 வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வாக்களிப்பு பணிகள் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்பாக இன்று காலை 07மணி தொடக்கம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணமுடிந்தது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் மாவட்ட வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலை வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவுசெய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும் கோவிந்தன் கருணாகரம் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்திலும் தமது வாக்குகளை பதிவுசெய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு இம்முறை 304 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 04இலட்சத்து 09ஆயிரத்து 808 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 22 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.