சிறையில் அடைக்கப்பட்டதனால் றிசாத் பதியுதீனின் எதிர்கால அரசியல் செல்வாக்கு எவ்வாறுஅமையும்…

அரசியல் என்னும் பொதுவாழ்வில் தன்னை அர்பனிக்கின்றவர்களுக்கு சிறைக்கூடம் ஒரு சம்மந்தியின் வீடு போன்றதாகும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் எல்லோரிடமும் நடிக்கின்றவர்களுக்கு சிறைசெல்லுகின்ற பாக்கியம் கிடைப்பதில்லை.

இந்தியாவில் அரசுக்கு எதிராக சிறை நிறப்பு போராட்டமே நடாத்துவார்கள். அதாவது கோரிக்கையை நிறைவேற்றுங்கள் இல்லாவிட்டால் எங்களை சிறையில் அடையுங்கள் என்பது அந்த போராட்டத்தின் நோக்கமாகும்.

உலக அரசியலிலும், இலங்கை தமிழ் அரசியலிலும் சிறை செல்வதென்பது சாதாரண விடயமாகும். அவ்வாறு சிறை செல்லாதவர்களை அம்மக்கள் தலைவர்களாக ஏற்பதில்லை. ஆனால் எமது முஸ்லிம் சமூகத்தில் அரசியல் தலைவர்கள் சிறை செல்வதென்பது புதுமையாகும். அதாவது பழக்கப்படாத ஒன்றாகும். சொகுசாக மட்டும் வாழ நினைப்பதுதான் இதற்கு காரணமாகும்.

சிறைக்கு சென்ற உலக தலைவர்களினதும், எமது நாட்டில் உள்ள சிங்கள தமிழ் தலைவர்களினதும் பட்டியலை இங்கே குறிப்பிடுவதென்றால் பக்கங்கள் நீண்டுகொண்டே செல்லும்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களை எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு பொய் கூற முடியாது. அவர் எதற்காக சிறை சென்றார் என்று அறிவுக்கண்ணை திறந்து பார்க்க வேண்டும்.

ஊழல் செய்தார் என்பதற்காக அவரை கைது செய்யவில்லை. அவ்வாறு ஊழல் செய்தார் என்பதற்கான எந்தவித ஆதரங்களும் ஆட்சியாளர்களிடம் இல்லை என்று ஊகிக்கலாம்.

மூன்று தசாப்தங்களாக அகதிகளாக புத்தளத்தில் இருக்கின்ற மக்களை வாக்களிக்க செய்வதற்காக அரச பேரூந்துக்களில் வன்னிக்கு அழைத்துச்செல்ல முறைகேடாக நிதியை பயன்படுத்தினார் என்பதுதான் அவர்மீதுள்ள குற்றச்சாட்டாகும்.

இது கடந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டும் முதன்முதலாக இவ்வாறு நடைபெறவில்லை. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் இது நடந்துள்ளது.

இதற்கான பேரூந்துக் கட்டணம் செலுத்தப்பட்டிருந்தும் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்று அவரை கைது செய்ததன் மூலம் தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் திருப்திப்படுத்தப் பட்டுள்ளார்கள்.

அதாவது கடந்த தேர்தலில் எந்த அரசியல்வாதியை பயங்கரவாதியாக காண்பித்து சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றார்களோ, அந்த மக்களிடம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு உள்ளது. அதனால் றிசாத்தை கைது செய்து அதனை நிறைவேற்றி உள்ளார்கள்.

சிறை சென்று திரும்பிய அரசியல்வாதிகளதும், தலைவர்களதும் செல்வாக்குகள் மக்கள் மத்தியில் அதிகரித்ததே தவிர குறைவடைந்ததில்லை என்பது கடந்தகால வரலாறாகும்.

எனவே மக்களுக்கான பணியை செய்ததனாலேயே றிசாத் பதியுதீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதனால் பேரினவாத ஆட்சியாளர்கள் மீது வெறுப்புக்கள் அதிகரித்து முஸ்லிம் மக்களின் செல்வாக்குகள் றிசாத் மீது அதிகரிக்குமே தவிர குறைவடையாது என்பது எனது நடுநிலையான கணிப்பாகும்.

முகம்மத் இக்பால்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்