மூதூரில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி- திருகோணமலை மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்

திருகோணமலை-மூதூர் பகுதியில் 19  பேருக்கு பீசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் மூன்று பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 12 பேர் மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்  தெரிவித்தார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (01) மாலை 2.30 மணியளவில்  இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
 திருகோணமலை மாவட்டத்தில் 2207 பேர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 834 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.
 இந்நிலையில் 1321 பேர் சுய தனிமைப்படுத்தலில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வும் மூதூர் பிரதேசத்தில் 168 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 495 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆறு கொரோனா தொற்றாளர்களும், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசத்தில் மூன்று பேரும்,உப்புவெளி  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும், தம்பலகாமத்தில் ஒருவரும் இணங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
இதேவேளை வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்து உடனடியாக பொலிசாருக்கு அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்துமாறும்  தேவையற்ற விதத்தில் மக்கள் நடமாட வேண்டாம் எனவும், சுகாதார திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்களை
பின்பற்றுமாறும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.