அனுமதி பெற்ற நடமாடும் வியாபாரிகள் மாத்திரம் ஊடரங்கு பகுதியில் விற்பனை செய்யலாம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அனுமதி பெற்ற நடமாடும் வியாபாரிகள் மாத்திரம் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதால் மக்களின் உணவு பிரச்சனைகள் தொடர்பில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் விஷேட கூட்டம் இன்று (02)இடம்பெற்றது.

இதன்போது வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமை காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அனுமதி பெற்ற பதினைந்து நடமாடும் வியாபாரிகளுக்கு வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒரு கிராம சேகவர் பிரிவிற்கு மூன்று வாகனங்கள் என்ற அடிப்படையில் வாகனத்தில் உலர் உணவு பொருட்கள் அடங்கிய ஐநூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொதிகள் விற்பனை கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு நடமாடும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்ற வியாபாரிகள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி, ஓட்டமாவடி பிரதேச சபை, வாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் அனுமதி கையொப்பம் இருந்தால் மாத்திரம் விற்பனை செய்ய முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்ற வியாபாரிகள் வேறு பொருட்களை விற்பனை செய்வதாக எம்மால் கண்டு பிடிக்கப்படும் பட்சத்தில் இவர்களது வியாபார சான்றிதழ் இரத்து செய்யப்படும் என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொது சுகாதார பரிசோதகர்கள் வர்த்தகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

(ந.குகதர்சன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.