இருபதை ஆதரித்ததற்காக ஏன் விமர்சிக்க வேண்டும் ? கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள்என்ன ? மக்கள் முட்டாள்களா ?

இருபதாவது அரசியல் யாப்பு திருத்தத்துக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதன் காரணமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், விமர்சனத்தையும் உண்டுபண்ணியுள்ளது.

காரணமில்லாமல் கண்ணை மூடிக்கொண்டு இவர்களை யாரும் விமர்சிக்கவில்லை. கடந்தகால படிப்பினையும், இவர்களின் தூரநோக்கற்ற அரசியலும், சுயனலப்போக்குமே இதற்கு காரணமாகும்.

நீலம், பச்சை சார்ந்த தேசிய கட்சிகள் ஆட்சியமைப்பதற்கும், அவர்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றிக்கொள்வதற்கும் பாராளுமன்ற பலம் இல்லாத காலங்களில், தங்களது பேரம் பேசும் சக்தி இருந்தபோது அதனை பயன்படுத்துவதில் முஸ்லிம் தலைமைகள் தோல்வி கண்டன.

அதாவது அரசியல்வாதிகளின் சுயநல தேவைகளை பூர்த்தி செய்ததை தவிர, பேரம்பேசும் பலத்தை சமூகத்துக்காக பயன்படுத்தவில்லை என்பதுதான் இதன் பொருளாகும்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக நடைபெற்ற அனைத்து வகையான தேர்தல்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே கட்சியுடன் இணைந்து அல்லது சார்ந்து தேர்தலில் போட்டியிட்டது.

அது மட்டுமல்லாது 2006, 2010  காலங்களில் தேர்தலுக்கு பின்பு மகிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கி அமைச்சுக்களையும் அதற்கான அலங்காரங்களையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன் 2010 இல் ராஜபக்ச அரசாங்கம் கொண்டுவந்த சர்வாதிகாரத்திற்கான 18 வது அரசியலமைப்பு திருத்ததிற்கும் ஆதரவு வழங்கினார்கள்.

இவ்வாறெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்கிவிட்டு ““முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நிபந்தனையின் அடிப்படையிலும், ஒப்பந்தத்தின் பிரகாரமும், பேரம் பேசியே நாங்கள் இணைந்து கொண்டோம் அல்லது ஆதரவு வழங்கினோம். அத்துடன் கரையோர மாவட்டம் விரைவில் கிடைக்கும்”” என்று நாவு கூசாமல் மக்கள் முன்பாக கூறினார்கள்.

பாவம் எமது அப்பாவி மக்கள். அவர்கள் கோட்டும், சூட்டும் போட்டுக்கொண்டு வந்து கூறிய அனைத்து பொய்களையும் உண்மையென்றே நம்பினார்கள்.

ஆனால் காலங்கள் செல்லச் செல்ல உண்மை புரிந்தது. அதாவது இவர்கள் அமைச்சர், ராஜாங்க, பிரதி அமைச்சர், வெளிநாட்டு தூதுவர், திணைக்கள தலைவர், பணிப்பாளர், செயலாளர், இணைப்பாளர் போன்ற பதவிகளை இவர்களும், இவர்களது எடுபிடிகளும் குடும்பத்தினர்களும் நன்றாக அனுபவித்து உல்லாசம் அனுபவித்ததை தவிர இந்த சமூகம் அடைந்த அரசியல் நண்மை என்ன ?

அரசியல் நெருக்கடியான காலகட்டத்தில் நோர்வே, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தூதரகங்கள் மூலமாக கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக தகவல்கள் உள்ளது.

இதற்கு சான்றாக ஆடம்பர மாளிகைகள் மற்றும் அசையா சொத்துக்களை உறவினர்களின் பெயர்களில் வாங்கி குவித்ததை தவிர சமூகம் அடைந்த பயன் என்ன ?

அபிவிருத்தி என்ற போர்வையில் சில கட்டடங்களை கட்டினார்கள். அவைகள் பத்து வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட கொமிசன்களை பெறுவதற்காகவே அன்றி அதனால் எந்த பிரயோசனமும் இல்லை.

எனவேதான் கடந்த கால அனுபவத்தினால் ஆக குறைந்தது ஜனாஸா எரிப்பதையாவது தடுக்க முடியாத நிலையில் கண்ணை மூடிக்கொண்டு இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வளங்கியவர்கள் எவ்வாறு முஸ்லிம் மக்களுக்காக உரிமையை பெறப்போகிறார்கள் ? இதுவும் கடந்த கால ஏமாற்று வித்தை என்ற திடமான நம்பிக்கையுடன்தான் இவர்களை மக்கள் கடுமையாக விமர்சிக்கின்றார்கள்.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.