மட்டக்களப்பு முதலைக்குடா மகிழடித்தீவு பிரதேசங்களில் இறால் மற்றும் மீன் வளர்ப்புத் திட்டம் அமுல்படுத்த 381 ஏக்கர் அரச காணி இனங்காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் முதலைக்குடா மகிழடித்தீவு ஆகிய பிரதேசங்களில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அமுல்படுத்துவதற்கேற்ற 381 ஏக்கர் அரச காணி இனங்காணப்பட்டுள்ளது.
அடையாளப்படுத்தப்பட்டுள்ள இவ்வரச காணியினை பார்வையிடும் களவிஜயம் ஒன்று மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய க. கருணாகரன் தலைமையில் இன்று (06) மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் நவீன முறையில் இறால் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசின் விசேட திட்டத்தினை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.
இதனடிப்படையில் இப்பிரதேச மற்றும் மாவட்ட மக்களினது வாழ்வாதாரம், தொழில், பொருளாதார வளர்ச்சி மற்றும் பிரதேச அபிவிருத்திக்கும் இத்திட்டம் பெரிதும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த யுத்த காலங்களில் இப் பகுதியில் இறால் பண்ணைத் திட்டத்தினை முறையற்ற விதத்தில் நடைமுறைப்படுத்தியதினால் ஏற்பட்ட குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் உவராதல் போன்ற பாதிப்புக்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புக்களினால் முன்வைத்த குற்றச்சாட்டுகளை கவனத்திற் கொண்டு அவ்வாறான புறத்தாக்கங்கள் ஏற்படாமல் நவீன முறைகளைக் கையாளவும், குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் உவராதல் போன்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்கவும் சம்மந்தப்பட்ட துறைசார் நிபுணர் குழுவினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இக்காணிகளைப் பார்வையிடும் களவிஜயத்தின்போது காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரன்ஜினி முகுந்தன், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ரவிகுமார், பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் திருமதி. டி. தற்சனகௌரி, மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.