மக்கள் வாழ்க்கை மேலும் பாதிப்புற்றால் கொரோணா சட்டத்தை மீறி நடக்கும் ஆளும் அரசியல்வாதிகள் பொறுப்புக் கூற வேண்டும்……..

தற்போதைய நிலைமை மேலும் அதிகரித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புறுமாக இருந்தால் அதற்கான முழுப் பொறுப்புகளையும் கொரோண சட்டதிட்டங்களை மீறி தங்கள் அரசியல் நிகழ்வுகளை அரங்கேற்றும் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளும், அவர்களின் சொல்கேட்டு செயற்படும் ஒருசில அதிகாரிகளுமே ஏற்க வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபைப் பிரதித் தவிசாளருமாகிய பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

கொரோண நிலைமை தொடர்பில் நாட்டில் சட்டங்கள் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நிலைமையில் ஆளுந்தரப்பினரால் அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட மீறல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசினால் விதிக்கப்படுகின்ற கெரோணா சட்டதிட்டங்களை முதலில் அரச தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்றப் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் அதனை மக்கள் சரிவர கடைப்பிடிக்கின்றார்களா என்பதைப் பார்க்க முடியும். நீங்கள் போடும் சட்டங்களை நீங்களே மீறினால் மக்கள் என்ன செய்வார்கள்?

வெறுமனே எதிர்த்தரப்பினரை அடக்குவதற்கும், மக்களை ஒரு பீதிக்குள் உள்ளாக்குவதற்குமே இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மக்களின் வாழ்வியலில் நடக்கும் இன்ப, துன்ப நிகழ்வுகளைச் சரிவர செய்ய முடியாமல் கொரோணா சட்டங்கள் பாய்கின்றன. ஆனால் ஆளுந்தரப்பு அமைச்சர்கள் மக்களை ஒன்று திரட்டி கூட்டங்கள் நடத்துவதற்கும், அபிவிருத்தி என்ற மாயையினைக் கட்டவிழ்ப்பதற்கும் எந்தவித சட்டங்களும் பாய்வதில்லை.

இதன் பெயர்தான் ஒரே நாடு ஒரே சட்டமா என்றே கேட்கத் தோணுகின்றது. அமைச்சர்கள் பல நிகழ்வுகளை ஒழுங்கமைத்து செயற்படுகின்றார்கள். அதில் பெருமளவான மக்களும் கலந்துகொள்ளச் செய்யப்படுகின்றாhர்கள். இங்கு எவ்வித சட்ட வரைமுறைகளும் பின்பற்றப்படுகின்றமையையும் காணமுடிவதில்லை. அவ்வேளையில் கெரோணா சட்டங்கள் இவர்கள் மீது பாய்வதாகவும் தெரியவில்லை. இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் என்ன செய்கின்றார்கள். இதுவே சாதாரண மக்களின் நிகழ்வுகள் இவ்வாறு இடம்பெற்றிருந்தால் உடனே கெரோணா சட்டம், தனிமைப்படுத்தல் சட்டம் என என்னவோ எல்லாம் சொல்லுவார்கள்.

அன்றாடம் பிழைப்பு நடாத்தும் சலூன் கடைகளைத் திறப்பதற்குக் கூட வரிந்துகட்டிக் கொண்டு வரும் கொரோணா சட்டம் அபிவிருத்தி என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மக்களைத் திரட்டி அடிக்கல் நாட்டு விழாக்கள், திறப்பு விழாக்கள் என்பன மேற்கொள்வதற்கு மாத்திரம் வளைந்து கொடுக்கின்றதா எனும் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்வை முடக்கி ஆளுந்தரப்பினர் அரசியல் இலாபம் தேடும் இத்தகு செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இச்செயற்பாடுகளைக் கண்டும் காணாமல் இருப்பதும் வேதனைக்குரியது.

தற்போதைய இந்த வைரஸின் பரவல் வேக அதிகரிப்பினைக் கருத்திற் கொண்டு ஆளுந்தரப்பினர் தங்கள் அபிவிருத்தி விளையாட்டுகளை நிலைமைக்கேற்றால் போல் செயற்படுத்த வேண்டும். அதற்கு மக்களை ஒன்றுதிரட்டத் தேவையில்லை. அவ்வாறு ஒன்று திரட்டி அங்குள்ள மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் மேற்கொள்வது. முழுப் பொறுப்பையும் அந்நிகழ்வு ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும். அவர்கள் மீது உரிய சட்டங்களும் பிரயோகிக்கப்பட வேண்டும்.

இவ்வாறாக தற்போதைய நிலைமை மேலும் அதிகரித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புறுமாக இருந்தால் அதற்கான முழுப் பொறுப்புகளையும் கொரோண சட்டதிட்டங்களை மீறி தங்கள் அரசியல் நிகழ்வுகளை அரங்கேற்றும் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளும், அவர்களின் சொல்கேட்டு செயற்படும் ஒருசில அதிகாரிகளுமே ஏற்க வேண்டும் என்ற தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.