பேச்சுக் குறித்து சுமந்திரனுடன் கோட்டாவும் மஹிந்தவும் பேச்சு – விரைவில் ஆரம்பிக்கவும் முடிவு…

தமிழர் தரப்புக்கும் புதிய ஆட்சிப் பீடத்துக்கும் இடையிலான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உரையாடிய வேளை பேச்சுக்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இரு தரப்பினரும் பேசிக் கொண்டனர்.

பேச்சுக்கான அழைப்பும் திகதி, நேரம் பற்றிய விவரங்களும் ஜனாதிபதியால் விடுக்கப்பட்டதும் பேச்சு ஆரம்பமாகவுள்ளது.

நேற்று மதியம் நாடாளுமன்றக் கன்ரினில் எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிமலநாதன், சி.சிறீதரன், கலையரசன் ஆகிய நால்வரும் அமர்ந்திருந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

சற்றுத் தொலைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் டக்ளஸ் தேவானந்தா உட்பட சில அமைச்சர்களுடன் உணவருந்தி விட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் இருந்து முதலில் புறப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கன்ரின் வாசலை ஒட்டி உணவருந்திக் கொண்டிருந்த சுமந்திரனை நோக்கிப் புன்னகைத்தார். சுமந்திரன் எழுந்து சென்று பிரதமருக்கு வணக்கம் தெரிவித்தமையோடு, அவருக்குப் பிந்திய பிறந்த நாள் வாழ்த்தையும் தெரிவித்தார். அதை அன்புரிமையுடன் ஏற்றுக்கொண்ட பிரதமர் சுமந்திரனைத் நோக்கி, “நாங்கள் மீளவும் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்” என்றார்.

“ஓம். நாங்கள் அதற்குத் தயார். நாங்கள் தயார் என்பதை வெளிப்படையாகக் கூறியும் விட்டோம். நீங்கள்தான் நேரம் ஒதுக்கி, அழைப்பு விடுக்க வேண்டும்” என்று பதிலளித்தார் சுமந்திரன் எம்.பி.

“ஆமாம். நாம் பேசுவோம்.” என்று கூறிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அந்த இடத்துக்கு ஜனாதிபதி வரும் வரை சுமந்திரனோடு காத்து நின்றார்.

சாப்பாட்டு மேசையிலிருந்து, மற்றைய அமைச்சர்கள் புடைசூழ சில நிமிடங்கள் தாமதித்துப் புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுமந்திரன் எம்பியும், பிரதமரும் நின்ற இடத்தை நோக்கி வந்தார். சுமந்திரன் எம்.பியை ஜனாதிபதி நலன் விசாரித்தார்.

ஜனாதிபதிக்கு வணக்கம் செலுத்திய சுமந்திரன் எம்.பி.,  “நாங்கள் மீளவும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகின்றார்” என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

“ஆமாம். நாங்கள் பேச்சைத் தொடங்க வேண்டும்” என்றார் பிரதமர்.

“ஏன் நான் தேர்தலுக்கு முன்னரே சுமந்திரனுடன் பல சுற்றுப் பேச்சுக்களைத் தொடங்கி விட்டேனே…!” என்றார் ஜனாதிபதி.

“அது தேர்தலுக்கு முன்னரல்லவா? இப்போது தேர்தல் முடிந்து விட்டது. புதிய சூழல். எனவே, நாம் பேச்சை புதிதாகத் தொடங்குவோம். தொடங்க வேண்டும்” என்று குறுக்கிட்டுக் கூறினார் பிரதமர்.

ஆமாம் என்று தலையசைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, “பேச்சுக்கான நேரம், திகதி போன்றவற்றை ஒழுங்குபடுத்தி அறிவிக்கின்றேன்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமும், சுமந்திரன் எம்.பியிடமும் கூறிவிட்டு ஏனைய அமைச்சர்களுடன் அங்கிருந்து புறப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.