வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு தமிழ் பிரதிநிதிகள் தடையில்லை- சபையில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள் என்பதை இந்தச் சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

(நேற்று) மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறப்பது குறித்து எமக்குத் தெரியாது. எவரும் அறிவிக்கவும் இல்லை; அழைப்பு விடுக்கப்படவும் இல்லை.

நாடாளுமன்றத்தில் இருக்கும் நாம் வெற்றிலையில் மை பார்த்து நிகழ்வுகளுக்குச் செல்ல முடியாது.

போருக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடந்தது என்பதை நாம் நிராகரிக்கவில்லை, ஆனால், வடக்கு கிழக்கிற்காக ஒதுக்கிய நிதியை வைத்தே தெற்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.

அரசின் அபிவிருத்திக்கு எப்போதுமே நாம் தயாராக உள்ளோம். எமது மக்களின் நலன் கருதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒன்று சேர்ந்து பயணிக்க நாம் தயாராகவே உள்ளோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.