திரிபோஷா விநியோக தடை குறித்து விளக்கம்…

திரிபோஷாவை விநியோகிக்கும் நடவடிக்கை தடைப்பட்டிருப்பதாக அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து சுகாதார மேம்பாட்டு அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி. சித்ரமாலி டி சில்வா கருத்து தெரிவிக்கையில், சோளத்திற்கான தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா தயாரிப்பு தடைப்பட்டிருப்பதாக கூறினார்.

தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் குழந்தைகளின் போசாக்குநிலை குறைவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர் திரிபோஷா வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

திரிபோஷா விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்படவில்லை. இதன் தயாரிப்பிலேயே சில பிரச்சினைகள் உண்டு. இதற்கான சோளத்தை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே இதன் விநியோகம் தற்பொழுது தடைப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளினதும், தாய்மார்களினதும் போசாக்கு அவசியமாகும். இதன் காரணமாக போசாக்கு உற்பத்திக்கானவற்றை விரிவுப்படுத்தி பாலூட்டும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அதேபோன்று போசாக்கு குறைப்பாடுள்ள பிள்ளைகளுக்கும் திரிபோஷா வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது அத்தியாவசியமானது என நாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.