வலி.வடக்கு தவிசாளரின் வாகனம் மீது தாக்குதல்- ஒருவர் கைது

வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்திரம் சுகிர்தன் பயணித்த அலுவலக வாகனம் மற்றும் சாரதி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், வழி மறித்து தாக்குதலை மேற்கொண்டதுடன் சாரதியையும் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் நேற்று (20) இரவு, இளவாலை வசந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் வெள்ளநீர் வடிந்தோடும் வாய்க்காலை வெட்டும் நடவடிக்கையை கண்காணித்துவிட்டு திரும்பிய வேளையிலேயே, தவிசாளரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக, தவிசாளரினால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.