கல்முனை தெற்கு சுகாதார பணிமனை உத்தியோகத்தருக்கு கொரோனா; சாய்ந்தமருதில் தொற்றாளர் 54ஆக அதிகரிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் மீனவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுடன் சேர்த்து இன்று வியாழன் (07) வரையான காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்திருப்பதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை தெற்கு சுகாதாரப் பணிமனையில் கடமையாற்றும் குறித்த உத்தியோகத்தர் அண்மையில் கொழும்பு சென்று திரும்பி வந்துள்ள நிலையில், புதன்கிழமை (06) அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது கொரோனா வைரஸ் தொற்ற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் 15 மீனவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது ஒரு மீனவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அன்றைய தினம் இப்பிரதேசத்தில் பிரதான வீதியை மையப்படுத்தி வியாபார நிலையங்களில் 50 வர்த்தகர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இப்பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 54 பேரில் 25 பேர் பூரண சுகம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 29 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 907 பேருக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 182 பேர் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலுள்ளனர்- என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.