இலங்கைக்கு ஆதரவாக 47க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஆதரவாக செயற்படும்-சரத் வீரசேகர

நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில், இலங்கைக்கு ஆதரவாக 47க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயற்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “ஒருமித்த நாட்டின் கொள்கையினை மாணவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும்.

மேலும் நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை ஆகியவை குறித்து இளம் தலைமுறையினர் அதிக அக்கறை கொள்ள வேண்டும். பாரிய போராட்டத்திற்கு மத்தியில் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது. தற்போதைய இளம் சந்ததியினர் நாடு குறித்து பற்றில்லாமல் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரிவினைவாதம் நாட்டை பிளவுபடுத்தும்.

அதாவது, விடுதலை புலிகள் அமைப்பு யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தால் நாடு பிளவுப்பட்டிருக்கும். பௌத்த சாசனமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தமை தேசதுரோக செயற்பாடாக கருதப்படும்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் சார்பாக செயற்பட்டமையினால், மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 30(1) பிரேரணையில் இருந்து அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக விலகியது. நாட்டுக்கு எதிரான பிரேரணைகளுடன் இணைந்திருக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

மேலும் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில், இலங்கைக்கு ஆதரவாக 47க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயற்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்