போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் துரிதப்பட்டுள்ளளதாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று (17) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அச்சமும், சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் நோக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அமைச்சை நிறுவியுள்ளதாகவும், பாதாள குழுக்களின் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அபிவிருத்திக்கு துணைநிற்கும் இளைஞர் சமுதாயம் போதைப்பொருளுக்கு அடிமையானால் நாட்டின் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது. அதிகமான போதைப்பொருள் கடத்தல் கடல் வழியாகவே இடமபெறுகிறது. இதுபோன்ற கடல்வழி மூலமான கடத்தல்களை அடையாளம் காண இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மட்டத்தில் குழுக்களை அமைத்து போதைப்பொருளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் சுமார் 31,000 கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சுமார் 11,000 பேர் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அவர்கள் மீண்டும் மீண்டும் சிறைக்கு செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே எதிர்காலத்தில் அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காகவும், அவர்களைப் பாதுகாப்பதற்காகவும் புதிய பொலிஸ் குழுக்கள் ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பாக 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தினூடாகவும், கப்பம் பெறுவது தொடர்பாக 118 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தொடர்பு கொண்டு பொது மக்களால் தகவல்களை வழங்க முடியும். பொலிசாரினால் மாத்திரம் இதை தனியாக வெற்றி கொள்ள முடியாது என்றும், குற்றங்கள் இடம்பெற முன் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்க இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை