குடும்பத் தகராறு தாக்குதலில் குடும்பஸ்தர் பலி மனைவி பிள்ளைகள் கைது!

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட நீண்ட நாள் வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குடும்பஸ்தர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறுமுகத்தான்குடியிருப்பு பாரதி வீதியை அண்டியுள்ள வீட்டில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வீட்டில் மனைவி பிள்ளைகள் ஆகியோரின் தாக்குதலுக்குள்ளாகிப் பலியானவர் கணேஷ் குணராசா (வயது 38) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை 09.03.2021 தாக்குதலுக்குள்ளான நிலையில் படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பயனின்றி புதன்கிழமை 10.03.2021 இரவு மரணித்துள்ளார்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது இந்தக் குடும்பத்தில் நீண்ட காலமாகவே தகராறு நிலவி வந்துள்ளது.

பொலிஸிலும் குடும்பத் தகராறு காரணமான முறைப்பாடு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

மனைவி கணவனிடமிருந்து பிரிவதற்காக விவாகரத்துக் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மனைவி பிள்ளைகள் வாழும் வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு குணராசா சென்ற நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து இவரைத் தாக்கியுள்ளனர்.

தலைப்பகுதி பலமாகத் தாக்கப்பட்டு இவர் படுகாயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் உதவியோடு அவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிசிக்சை பயனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வரும் பொலிஸார் சந்தேக நபர்களான மனைவி மகன் இரு பெண் பிள்ளைகள் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்