மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு!

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக சட்ட விரோத மணல் அகழ்வுகள் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத மணல் அனுமதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மக்களாலும் பிரதேச சபை உறுப்பினர்களாலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அதனையடுத்து கடந்த மாதம் மாவட்ட ஒருங்கிணப்பு குழுவினால் அனைத்து வித மணல் அகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டதுடன், மணல் அகழ்வு தொடர்பாக ஒழுங்கமைக்கப்பட்டதன் பின்னர் அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினரும், திடீர் மரண விசாரணை அதிகாரியுமான றொஜன் ஸ்ராலின் தனக்கு வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதி புதுபிக்கப்படவில்லையெனவும் அரச அதிகாரிகள் தங்கள் பணியை ஒழுங்காக மேற்கொள்ளவில்லை எனவும் கோரி மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர், நானாட்டன் பிரதேச செயலாளர், மற்றும் சுரங்கம் மற்றும் அகழ்வுக்கு பொறுப்பான அதிகாரி மீது வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் விசாரணை இடம் பெற்றது.

இருப்பினும் குறித்த வழக்கை விசாரிப்பதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு நியாதிக்கம் இல்லையெனவும் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவர் அரச பணியை செய்யவில்லை என கோர முடியாது எனவும், குறித்த வழக்கு அடிப்படை அற்றது எனவும் இதை மீளப்பெற்றுக் கொள்ளுமாறும் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மற்றும் எஸ்.டிணேஸன் ஆகியோர் வாதத்தை முன் வைத்தனர்.

இதே வேளை மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மன்னாரில் அதிகரித்து வரும் சட்ட விரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தவும் பொது மக்களின் தேவைக்காக மணல் அகழ்வு செய்வதற்கும் பொருத்தமான இடங்களைத் தேடி கள விஜயம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன் போது நானாட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட அருவியாறு, பண்ணை வெட்டுவான் போன்ற இடங்களிலுள்ள ஆற்றுப் பகுதிகள் பார்வையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.