வடக்கு சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினை- ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு!

வடக்கில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் 24ஆம் திகதி தீர்வைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமக்கு உறுதியளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சில ஊடகங்கள் உத்தியோகபூர்வமற்ற மற்றும் அவதூறுச் செய்திகளைப் பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் இன்றைய (சனிக்கிழமை) ஊடக சந்திப்பில் சுகாதாரத் தொண்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவர்கள் தெரிவிக்கையில், “சுகாதாரத் தொண்டர்களாகிய எமக்கு நிரந்த நியமனம் வழங்கப்பட்டும் பணியினைத் தொடர விடாத நிலையில், இதற்கு நீதி கோரி் நாம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் பேராட்டத்தை முன்னெடுத்தோம்.

இந்தப் போராட்டம், கடந்த மார்ச் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதும் வடக்கு ஆளுநர் எம்மைச் சந்திக்க மறுத்துவந்த காரணத்தினால் நாம், மார்ச் எட்டாம் திகதி முதல் உணவுத் தவிர்ப்புப் பேராட்டத்தில் ஈடுபட்டோம்.

அவ்வாறுகூட,  எமக்கான நீதி கிடைக்காத நிலையில் வீதி மறியல் போராட்டங்களையும் முன்னெடுத்தோம். இந்நிலையில், அப்போது இடம்பெற்ற சில வேண்டத்தகாத நிகழ்வுகளுக்கு நாம் மனம் வருந்துகின்றோம்.

அத்துடன், எம்மையும் எமது போராட்டத்தையும் மாற்று கண்கொண்டு பார்ப்பதையும் இது தொடர்பான தவறான பிறழ்வுகளைப் பதிவுசெய்வதையும் நாம் வெறுப்பதுடன் வேதனையும் அடைகின்றோம்.

நீதிக்கான போராட்டத்தை மக்களின் முன்னும் உரியவர்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்களுக்கு நன்றி கூறும் அதேவேளை, சில ஊடகங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகள் வேதனையடையச் செய்கின்றன.

அத்துடன், உத்தியோகபூர்வமாக நாம் வழங்கும் கருத்துக்களைத் தவிர, மாறுபட்ட அல்லது உத்தியோகபூர்வமற்ற வகையில் செய்திகளைப் பகிர்வதற்கு நாம் பொறுப்புடையவர்களாக இருக்கமாட்டோம்.

எமது நீதி கோரிய போராட்டத்தின்போது, அரசியல் பிரதிநிதிகள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எம்மைச் சந்தித்திருந்தனர்.

இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாணத்திற்கு வியஜம் செய்திருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கடந்த 18ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட எம்மைச் சந்தித்தனர்.

இதன்போது, சுகாதாரத் தொண்டர்களின் குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடாக எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஜனாதிபதி மற்றும் பிரதமர்களுடன் சந்திக்கவைத்து எமக்கான பணியினைத் தொடர அனுமதி பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கினார்கள்.

இதையடுத்து, எமது உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு கவனயீர்ப்புப் போராட்டமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்பதை அறியத்தருகின்றோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.