பயணத்தடையை மீறி பயணம் செய்த பலரை பாதுகாப்பு தரப்பினர் எச்சரிக்கை!

 

(பாறூக் ஷிஹான் )

பயணத்தடையை மீறி பயணம் செய்த பலரை பாதுகாப்பு தரப்பினர் எச்சரிக்கை செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக 3 ஆவது கொரோனா அனர்த்த அலையை தவிர்க்கும் முகமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் விசேட அதிரடிப்படை இராணுவத்தினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது பிரதான வீதியில் அவசியமற்ற நிலையில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் சுற்றி திரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை மருதமுனை கல்முனை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி மத்தியமுகாம் சவளக்கடை சம்மாந்துறை சொறிக்கல்முனை நிந்தவூர் அட்டாளைச்சேனை அட்டப்பளம் காரைதீவு சாய்ந்தமருது மாளிகைக்காடு அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் போன்ற பகுதிகளில இடம்பெற்றுள்ளது.

தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளதுடன் கொவிட் பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக கடந்த வியாழன் நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது.

நாளை அதிகாலையுடன் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும் நாளாந்தம் இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படுவதுடன் மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாடு நீடிக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும் கடமைக்கு செல்வதை தவிர வேறு நோக்கங்களுக்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே வீட்டை விட்டு வெளியேற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான  பொதுமக்கள் குறுக்கு வீதிகள் ஊடக பயணங்கள் செல்வதனை காண முடிகின்றது.இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்  கொரோனா சட்டத்தினை மதிக்காது மற்றும் முகக்கவசங்களை அணியாது பயணம் செய்பவர்கள் பலருக்கு எழுந்தமான முறையில் அன்டீஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுச்சுகாதார உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கல்முனை வடக்கு, அட்டாளைச்சேனை மற்றும் சம்மாந்துறை ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள், இவ்வாரம் மிக அவதானத்துக்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும் அவர் கேட்டுள்ளார்.

கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலையில் கல்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 18 பேரும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 13 பேரும், நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 08 பேரும், சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை தெற்கு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவூகளில் தலா 07 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், காரைதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 05 பேரும், அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 04 பேரும், திருக்கோவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 03 பேரும், சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் ஒருவருமாக மொத்தம் 73 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்  சமூக மட்டத்தில் பரவுவதை தடுப்பதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 13 சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இது தவிர அவசியமற்ற காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேறும் நபர்கள் குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்