வீதிகளில் உலாவி நோய்க்காவிகளாக மாறிவிடாமல் வீட்டில் குடும்பத்தாருடன் இருந்து கொள்ளுங்கள் :  இளைஞர்களுக்கு தவிசாளர் றாஸிக் ஆலோசனை !

(நூருல் ஹுதா உமர்)

இளைஞர்கள் உல்லாசமாக இருந்து பழகியவர்கள் என்பதனால் கொரோனா தொற்றை மறந்து கவனயீனமாக செயற்படுவது எல்லோருக்கும் அசௌகரியத்தை உண்டாக்கி விடும். வீட்டில் உள்ள குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் என பலரையும் மனதில் கொண்டு வெளியில் உலாவித்திரிந்து நோய்க்காவிகளாக நாங்கள் மாறிவிடாமல் சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து வீட்டில் இருந்து குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்று தேசிய காங்கிரசின் பிரதித்தேசிய அமைப்பாளரும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ. றாஸிக் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தின் சமகால கொரோனா நிலைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இன்று (02) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், இப்போது எங்களின் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அரிதாகவே உள்ளார்கள். அப்படி அடையாளப்படுத்தப்பட்ட பலரும் சுகம் பெற்று வீடுதிரும்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் பிரதேசத்தில் கட்டுக்கோப்பான இறுக்க நிலையுடன் கூடிய கொரோனா கட்டுப்பாட்டு திட்டமிடலை சுகாதார வைத்திய அதிகாரிகள், அக்கரைப்பற்று மாநகர முதல்வர், அக்கரைப்பற்று பொலிஸார், பாதுகாப்பு படையினருடன் இணைந்து எங்களின் மாநகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும், பொதுச்சுகாதார பரிசோதர்களும் மேற்கொண்டு வருகிறோம்.

எங்களின் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் முதல் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் சகல தரப்பினருக்கும் ஆளணி பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது 24 மணித்தியாலங்களும் சேவையில் உள்ள இந்த மக்கள் பாதுகாவலர்களின் சேவை கௌரவத்துடன் மதிக்கப்பட வேண்டியது. இவர்களின் சேவைக்கு இடையூறு செய்யாது மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டியது நமது கடமையாகும். இந்த கோவிட் காலத்திலும் ஊடகங்கள் உயிரூட்டமாக செயற்படுவது பாராட்டத்தக்கது. இந்த காலகட்டங்களில் சமூகவலைத்தளங்களின் பயன்பாட்டாளர்கள் போலியான தகவல்களை வழங்காது உண்மையான செய்திகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டங்களில் கிழக்கில் பேசுபொருளாக மாறியிருந்த அக்கரைப்பற்று பிரதேசத்தை  கொத்தணியிலிருந்து காப்பாற்றி கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசமாக மாற்றியமைத்துள்ளோம். இதனை வெற்றிகரமாக செயற்படுத்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், அக்கரைப்பற்று மாநகர முதல்வர், அக்கரைப்பற்று பொலிஸார், பாதுகாப்பு படையினருடன் இணைந்து எங்களின் மாநகர மற்றும் பிரதேச சபைகளின் ஊழியர்களும், பொதுச்சுகாதார பரிசோதர்களும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றினர். அவர்களுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்கிய இந்த பிரதேச மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.