சாய்ந்தமருது வைத்தியசாலையில் 50 கட்டில்களுடன் கொரோனா சிகிச்சை நிலையம்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான விடுதிகள் இன்று (15) திறந்து வைக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலையின் பதில் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.எச்.கே.சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் கலந்து கொண்டு இவ்விடுதிகளை திறந்து வைத்தார்.
இங்குள்ள கட்டடங்கள் சுமார் 09 லட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு, கொரோனா சிகிச்சைக்கென 02 விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆண், பெண் கொரோனா தொற்றாளர்களுக்கென தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்விடுதிகளில் கொவிட் நோயாளிகளுக்கான 50 கட்டில்கள் மற்றும் தாதியர்களுக்கான ஓய்வறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளிலுள்ள கொவிட்-19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இவ்விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது கல்முனைப் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள 05ஆவது
கொரேனா சிகிச்சை நிலையமாகும்.
இதனைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.வாஜித், கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம்.நியாஸ், சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளான டாக்டர் திருமதி சிவாசுப்ரமணியம், டாக்டர் திருமதி எஸ்.ஜே.ஜஹான் உட்பட நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்