திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு ரவிகரனுக்கு முல்லை நீதிமன்று தடை உத்தரவு; போலீசாரால் தடைக்கட்டளை கையளிப்பு.

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு போலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தவுள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு போலீசார் 24.09.2021நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம் AR/724/21இல் வழக்குப் பதிவுசெய்திருந்தனர்.

அதனடிப்படையில் போலீசாரல்தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந் நிலையில் குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி 25.09.2021இன்று, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் இல்லத்திற்குச் சென்று கையளித்துள்ளார்.
மேலும் குறித்த தடையுத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

துரைராசா ரவிகரன் ஆகிய நீங்கள் முல்லைத்தீவு போலீஸ் பிரிவிற்குள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த இராசையா பார்த்தீபன் என்பவர் தொடர்பில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்தவுகள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென முல்லைத்தீவு போலீசார் அறிக்கை செய்துள்ளனர்.

எனவே துரைராசா ரவிகரன் ஆகிய நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் முல்லைத்தீவு போலீஸ் பிரிவிற்குள் 24.09.2021 தொடக்கம் 27.09.2021 வரையான காலப்பகுதிக்குள் இராசையா பார்த்தீபன் தொடர்பிலான எந்தவொரு நினைவுகூரலையும் மேற்கொள்ளக்கூடாதென்ற தடைக்கட்டளையினை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் பிரிவு 106இற்கு அமைவாக பிறப்பிக்கின்றேன். எனக் குறித்த நீதிமன்றத் தடைக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு போலீசார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, தமிழரசுக்கட்சி உறுப்பினர் அ.பீற்றர் இழஞ்செழியன் உள்ளிட்டவர்களுக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்