சிறைகளில் அடைபட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவியுங்கள்; பா.உ முஷாரஃப்.

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரஃப் அவர்கள் தெரிவித்தார்.
2021-10-06 அன்றைய பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுள் எந்தவொரு குற்றமும் புரியாத பலரும் உள்ளனர். க.பொத. சா/த, உ/த பரீட்சைகளைத் தொடர்ந்து கிடைக்கின்ற விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் நோக்குடன் சன்மார்க்க நற்போதனைகள் கேட்பதற்காக சென்ற இளைஞர்கள் கூட சந்தேகத்தின் பேரில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீதியான முறையில் விரைவாக விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்.
“ஒரு தேசத்தின் சிறைகளுக்குள் இருக்கும் வரை யாரும் உண்மையிலேயே ஒரு தேசத்தை அறிய மாட்டார்கள். ஒரு தேசம் அதன் உயர்ந்த குடிமக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதிலன்றி, கீழ்நிலை மக்களை எவ்வாறு நடத்துகின்றது என்பதிலேயே தேசம் குறித்து தீர்மானிக்கப்படல் வேண்டும்” என்கிறார் தென்னாபிரிக்காவின் தந்தை நெல்சன் மண்டேலா.
எமது அரசியலமைப்புச் சட்டமும் எந்தவொரு கைதியும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக் கூடாது என்கிறது. இருப்பினும் மெகசின் சிறைச்சாலை உயிரிழப்பு சம்பவம், அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் என்பவற்றிற்கு பதில் கூற வேண்டிய அரசாங்கங்களின்  பொறுப்பு கேள்வியாகவே நீடிக்கிறது. சிறைகள், கைதிகளை புனர்வாழ்வளிக்கின்ற இடமாக இருக்க வேண்டுமே அன்றி குற்றங்களுக்கு துணைபோவதாக இருக்கக் கூடாது. சிறைக் கைதிகளின் உரிமைகள் கண்ணியத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.