கௌரவ பிரதமரின் தலைமையில் தந்தினா சமரசிங்க திசாநாயக்க அவர்களின் நினைவு தினம்.

ராஜபக்ஷ குடும்பத்தின் உன்னத தாயாக மதிக்கப்படும் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் அன்பு மனைவி தோன தந்தினா சமரசிங்க திசாநாயக்க அவர்களை நினைவுகூரும் ‘மேன்மை பொருந்திய அன்னையின் நினைவு தினம் -2021’ (உத்தம மாதா குண சமரு பூஜா -2021) எம்பிலிபிட்டிய டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு மையத்தில் இன்று (02)பிற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

எம்பிலிபிட்டிய நகர சபையின் உறுப்பினர் கே.ருவண் பதிரண அவர்களினால் ஐந்தாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுதின நிகழ்வில் தென்னிலங்கையின் பிரதான அதிகரன சங்கநாயக்கர் ஓமல்பே சோபித தேரர் பங்கேற்றார்.

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் இதன்போது தோன தந்தினா சமரசிங்க திசாநாயக்க அவர்களது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி அவர்கள் மலர் மாலை அணிவித்து தோன தந்தினா சமரசிங்க திசாநாயக்க அவர்களை நினைவுகூர்ந்தார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே மற்றும் ஜனக வக்கும்புர ஆகியோரும் இதன்போது தோன தந்தினா சமரசிங்க திசாநாயக்க அவர்களுக்கு உருவப்படத்திற்கு மலரஞ்சலி செய்தனர்.

தந்தினா திசாநாயக்க அவர்களது பிள்ளைகளின் மூலம் அவர் எத்தகைய குணாதிசயம் கொண்டவர் என்பதை புரிந்துக் கொள்ளலாம் என அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அவர்கள் சுட்டிக்காட்டினார்.

“தந்தினா சமரசிங்க தியாநாயக்க அவர்கள் குறித்து எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியாது. எனினும், அவரது பிள்ளைகளின் அரசியல் தளம் தொடர்பில் நான் நம்பிக்கையுடன் கூறலாம். நாம் மரமொன்றின் இலையை கொண்டு மரத்தை அடையாளம் கண்டு கொள்கிறோம். தந்தினா திசாநாயக்க அவர்களது பிள்ளைகளின் மூலம் அவர் எத்தகைய குணாதிசயம் கொண்டவர் என்பதை புரிந்துக் கொள்ள முடியும். எந்தவொரு மனிதனதும் முதலாவது பாடசாலை அல்லது முதலாவது ஆசிரியை அவர்களது தாயே ஆவார்.

தந்தினா சமரசிங்க திசாநாயக்க அவர்கள் ஒரு தனித்துவமான பெண் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம். அவரது கணவர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்கள் எமது நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஒரு அரசியல் மற்றும் சமூகப் புரட்சியைக் குறிக்கும் 1956 சகாப்த மாற்றத்திற்கு பங்களித்த ஒரு முன்னோடியாவார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், இருமுறை ஜனாதிபதியாக சேவையாற்றிய தற்போதைய பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் தாயாராக அவர் வரலாற்றில் இணைந்துக் கொள்கிறார். அவர் எமது நாட்டிற்கு அர்ப்பணித்த பிள்ளைகள் நமது நாட்டின் சுதந்திரம், சமூக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆற்றிய பங்களிப்பு சிறப்பானது.

அவர் இந்நாட்டிற்கு அர்ப்பணித்த பிள்ளைகளுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி இப்பயணத்தை சீரானதாக முன்னெடுக்க நாம் ஒத்துழைப்பதே ஆகும்” என மொஹான் சமரநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் பவித்ரா தேவி வன்னிஆராச்சி, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, ஜானக வக்கும்புர, எம்பிலிபிட்டிய நகர சபையின் உறுப்பினர் கே.ருவண் பதிரண, அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, பெல்வத்த சீனி தொழிற்சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி காமினி ராசபுத்ர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்